வீதி இலக்கியக் களம் - புதுக்கோட்டை
கடந்த ஞாயிறு (20-06-2016) அன்று நடைபெற்ற வீதி இலக்கியக் கூட்டத்தில் நான் வாசித்த கவிதை :
தூக்கி எறியப்பட்ட சொற்கள்
ஜென் போன்றதொரு
ஆழ்ந்த தியானத்தில்
எச்சிலை விழுங்கியப்படியும்
பேனாவின் பின்புறம்
பற்களால் சிற்பம் செய்தபடியும்
காத்திருந்தேன்
அவளுக்கான சொற்களுக்காய் ......
இரவில் மொட்டைமாடி நடையிலும்
ஹெட்செட் வழி இசையிலும்
உறங்காத உறக்கத்திலும்
காத்திருந்தேன்
அவளுக்கான சொற்களுக்காய்...
காலை கனவில்
மலையில் நடந்தபடியும்
குளத்தில் கல்லெறிந்தபடியும்
தூரலில் நனைந்தபடியும்
காத்திருந்தேன்
அவளுக்கான சொற்களுக்காய்...
நினைவுகளை
பேனாவில் ஊடுருவச்செய்து
வார்த்தைகளாக்கி
மைவழி சிதறச்செய்ய
காத்திருந்தேன்
அவளுக்கான சொற்களுக்காய்...
செவிகளில்
ரீங்காரமிடும் சொற்களை
பொறிக்கியெடுத்தும்
சுற்றி வந்து தர்க்கம் செய்யும்
சொற்கள் தாண்டியும்
காத்திருந்தேன்
அவளுக்கான சொற்களுக்காய்...
உருண்டு பிரண்டும்
உருக்கிச் சேர்த்தும்
உன்னதமாய் இல்லையென
தூக்கியெறிந்தேன்
உனக்காக எழுதப்பட்ட
ஆயிரம் சொற்களை....
--பா . ஸ்ரீமலையப்பன்













