ஞாயிறு, 31 மே, 2020

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி


அஞ்ஞாடி!

இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என் மனதில் என்றும் நிறைந்திருக்கும் திருமிகு. குருநாதசுந்தரம் அய்யா  அவர்கள். அவர் ஒருமுறை வீதி கலைஇலக்கிய கூட்டத்தில் இந்த நூலினை ஆய்வு செய்து விமர்சனம் செய்தார். அவரது விமர்சனம் உடனே படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது. ஆனால் எனக்கு புத்தகம் கிடைக்கவில்லை. இது நடந்தது 2016 ஆம் ஆண்டு.

அப்போதிருந்து ஒவ்வொரு புத்தக கடைக்கு சென்றாலும் இந்த புத்தகத்தை தேடாத நாளில்லை. எனக்கு அது கிடைக்கவேயில்லை. பொன்வாசி அண்ணன் அவர்கள் இந்த நூலினை எனக்கு வாங்கி தருவதாக சொல்லியிருந்தார். அவரது கைக்கும் நூல் அகப்படவில்லை. இறுதியாக  தங்கை ஹபிலா அவர்களிடம் கடந்த ஜனவரியில் சென்னை புத்தக காட்சிக்கு செல்லும் போது இந்த நூலினை கேட்டேன். நூல் அகப்பட்டது. இதை மிக சாதுர்யமாக அதிக தள்ளுபடியுடன் வாங்கித்தந்த ஹபி சார் அவர்களுக்கும் எனது நன்றிகள். அஞ்ஞாடி!

அஞ்ஞாடி! முதலில் என்னை கவர்ந்தது இந்த பெயர்தான். “அஞ்ஞாடி” என்றால் என்ன? பெரும் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தேன். இந்த விமர்சனத்தில்கூட அதன் விளக்கத்தை நான் சொல்லவேண்டாமென நினைக்கிறன். ( கண்டிப்பாக உங்களுக்கு தெரியேண்டுமெனில் என்னை தனிபதிவில் அழைக்கவும், தெரிந்தவர்கள் அமைதி காக்கவும்) ஒரு பத்து தலைமுறை வரலாற்றை தன்னுள்ளே கொண்டிருகிறது இந்நூல். 

ஆண்டி மற்றும் மாரி இந்த இரண்டு கதாபாத்திரங்களுடன் துவங்குகிறது கதை. இருவரும் வெவ்வேறு குடியில் பிறந்தவர்கள். இருவருக்கும் உண்டான நட்பு அய்யயோ நம்மால் இந்த இரண்டு கதாபதிரங்களையும் விட்டு வெளிவரவே முடியாது. சிறுவர்களாக இருந்து பெரியவர்களாகி, குடும்பஸ்தர்களாக வளர்ந்து மகன் மகள் பேரன் பேத்தி கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்தி அவர்களது பிள்ளைகள் வரை நீள்கிறது நாவல். தென் தமிழகம் எப்பொழுதுமே வாழ்வியலை நமக்கு வேறுமாதிரியாக சொல்லித்தருகிறது. அஞ்ஞாடி அந்த காலத்தில் வாழ்ந்த எதார்த்தமான மனிதர்களை மிக எளிமையாக நமக்குள்ளே கடத்துகிறது.

ஆண்டி கருப்பியின் வாழ்வு என்பது நாம் ஒவ்வொருநாளும்  வாழ ஆசைபடும் வாழ்வு. நம்முடைய வீடுகளில் வாழ்ந்த பாட்டனும் பாட்டியும், பூட்டனும் பூட்டியும் கூட இப்படி வாழ்ந்தவர்கள்தாம். ஆண்டிக்கும்  கருப்பிக்கும் இருக்கும் காதலையும் பாசத்தையும் படிக்கப்படிக்க ஆனந்த கண்ணீர் நமக்கு நிச்சயம் வந்தே தீரும். ஆண்டி ஒவ்வொரு முறையும் ஏம்பிளி கருப்பி! எனும்போதெல்லாம், கருப்பி அவரை ஏ இவனே! என்று அழைக்கும்போதெல்லாம் ஐயோ அந்த அன்பை சொல்ல வார்த்தைகளே இல்லை. எவ்வளவு அன்பு அவர்களுக்குள். “கண்ணின் கடைப்பார்வை கன்னியர்கள் காட்டிவிட்டால் மண்ணில் குமரற்கு மாமலையும் ஓர்கடுகாம்!”. இந்த வார்த்தையை முதிந்த வயதிலும் காப்பற்றியிருக்கின்றனர் இருவரும். ஒரு குடும்பத்தில் பெண்  எவ்வளவு முக்கியமானவள் என்பதை இந்த நூலில் பல இடங்களில் நாம் உணர முடியும். ஆண்டி சுனங்கும்போதேல்லாம் அட நா இருக்கேன் வா என்று தைரியப்படுத்தும் கருப்பி போன்ற பெண்கள்தான் நிஜ நாயகிகள். 

அஞ்ஞாடி படித்த பிறகு நிச்சயமாக உங்கள் வாழ்கை முறை சிறிதேனும் மாறும். ஆண்டி மற்றும் கருப்பின் மனவோட்டத்தினை புரிந்துகொண்டால் அன்பு, பாசம், நட்பு, உழைப்பு இத்தனையையும் நாம் கற்றுக்கொள்ள முடியும். அஞ்ஞாடி நமக்கு அன்பையும், மனித விழுமியங்களையும் கற்றுத்தருகிறது. கடந்த 200 ஆண்டுகளில் நம்முடைய குணமும், மனமும் எந்தளவுக்கு மாற்றமடைதிருக்கிறது என்பதை நன்றாக உணர முடிகிறது.

மாரி-அனந்தி இந்த இருவருக்குமான அன்பும் இதேபோல் தான். மாரி வெள்ளந்தியான மனிதராக வலம் வருகிறார். வெளுப்புத்துரையில் அவர் பாடும் பாட்டும் அவர் சொல்லும் கதைகளும் எப்போதும் மனதில் நிற்கும் ரகம். எல்லா சாதிகளும் ஒரு ஊரில் வாழ்ந்தாலும் எல்லோருக்கும் ஒற்றுமையை கற்றுத்தரும் ஊராக நம்மை உணர வைக்கிறது கலிங்கலூரணி.ஆனால் கழுகுமலையின் நிலைமையே வேறு.

ஆம்! கழுகுமலை தான் சாதியத்தை முழுமையாக நமக்கு கற்றுத்தரும் ஊராக இருக்கிறது. கரிசலில் நாடார்களின் கொடுமையான வாழ்கையை முழுவதுமாக விளங்க வைப்பதாக இருக்கிறது. ஆரம்பத்தில் சாணார்கள் என்று சொல்லபட்ட பனையேறிகள் தங்களுடைய கடினமான உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முதலாளிகளாக உயர்கிறார்கள். அவர்களுடய ஒரே கோரிக்கை  கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிடுவதுதான். அதுபோக கல்யாணம் நடக்கும் சமயங்களில் பட்டின பிரவேசம் போக வேண்டும். இதற்கான பல போராட்டங்கள் நடக்கிறது. முதல் படியாக சாணார் என்பதை நாடாராக மாற்றுகிறார்கள். மேல்சாதிகாரர்கள் எந்த சூழ்நிலையிலும் அவர்களை உள்ளே நுழையவிடவில்லை. நாடார்கள் தங்களுடய உரிமைகளை பெற முடியாமல் தவிக்கும்போது இந்த நிலையை மாற்ற கிருஸ்தவ மதத்திற்கு மாறுகிறார்கள். அப்படி மாறிய பிறகும் அவர்களுடய வாழ்கை மாறவில்லை. 

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்வில் எடுக்கும் மிகச்சிறிய முடிவுகள் மிகப்பெரும் விளைவுகள் ஏற்படுத்தியிருக்கிறது. இதுதான் வரலாறு. இது எவ்வளவு பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தும். நாம் காண முடியாத தென்தமிழக வரலாற்றை நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் பூமணி அய்யா. மறவர்களுக்கும் நாடார்களுக்கும் நடந்த போராட்டங்கள் பற்றி நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள முடிகிறது. இரு சமூகங்களிலும் எத்தனை உயிர்கள் போயிருக்கிறது என்பதை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.  இந்த கால கட்டத்தில் இந்தியா ஆங்கிலேய ஆட்சியின் கீழே இருந்திருக்கிறது. எட்டப்ப மகாராஜாவின் வம்சாவழிகளின் கீழ்தான் அந்த பகுதியை ஆட்சி செய்திருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டு நாம் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் நிலைமையிலும் இந்த சாதிய அடுக்குகளின் படிநிலைகள் எவ்வாறு மாற்றமடைந்திருக்கிறது என்பதை நீங்களே புரிந்துகொள்ள வேண்டியது.

இதுபோக இந்த நூல் உண்மை கலந்த புனைவு. நூலில் நம்முடைய வரலாறில் ஊர்காவல் தெய்வங்களாக எப்படி உண்மையில் வாழ்ந்த மனிதர்கள் உருமாறியிருக்கிரார்ர்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, எட்டப்ப மன்னர்களின் வரலாறுகள் இடம்பெற்றிருக்கிறது. நாடார்கள் மற்றும் மறவர்களின் போராட்டங்களில் இவர்களின் தாக்கம் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு கீழ் வந்தபிறகு கோர்ட் நடவடிக்கைகளின் சாதக பாதகங்களையும் உணர்ந்துகொள்ள முடியும். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைகளின்போது இந்து முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட துயரத்தை படிக்ககூட முடியவில்லை. நம் முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த வாழ்க்கையும் நம்மை வியக்க வைக்கிறது.  சமீபத்தில் சோ. தர்மன் அய்யா அவர்கள் எழுதிய சூழ் கூட இந்த மாதிரியான கதைகளத்தை கொண்டதுதான். 

இந்த நாவலுக்காக பூமணி அய்யா அவர்களின் உழைப்பு என்பது அபாரமானது. கிட்டத்தட்ட ஏழு வருட உழைப்பை கொட்டியிருக்கிறார். இதற்காக பல ஆவணங்களை தேடிப்பிடித்து 2000 பக்கங்களை சேகரித்து படித்ததாக ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார்.  இதை படிக்கும்போது பெரும் ஆச்சர்யமே அவரது கரிசல் மொழிதான். மிகவும் எதார்த்தமான எழுத்து. இதில் வரும் தெம்மாங்கு பாடல்களை மெட்டுபோட்டு பாட ஆசை வருகிறது. கரிசல் இலக்கியம் என்பதெல்லாம் இல்லை இனி இந்த பக்கத்தில் உள்ள இலக்கியங்களை தெந்தமிழக வரலாறு எண்டு கூறுங்கள் என்கிறார். 

எது எப்படியோ மனதுக்கு நிறைவான ஒரு நாவலை படித்த மகிழ்ச்சியில் இந்த வாசிப்பனுபவத்தை எழுதுகிறேன். ஒரு பக்கம் இதை நாடார் வரலாறு எனலாம். இன்னொரு பக்கம் இந்திய வரலாற்றில் ஏற்பட்ட ஆங்கிலேய காலனி ஆதிக்கம் கிறிஸ்தவத்தை எப்படி இங்கு பரப்பியது என்பதையும் அறியலாம். மதமாற்றம் ஒரு மிகப்பெரும் விளைவையும் மாற்றதையும் தமிழக மற்றும்  இந்திய மக்களின் வாழ்க்கையில்  மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அறியலாம்.

எல்லா மதங்களும் அன்பை போதிக்கிறது. பகவத்கீதையும், புனித குர்ஆனும், புனித பைபிளும் மனிதர்களுக்கு விழுமியங்களையும் அன்பையும் போதிக்கிறது. போதனைகள் நாம் வழிமாறிப் போகும்போது நம்மை செம்மைபடுத்தி நல்வழியில் நடத்தி செல்லவே என்பதை நாம் அறிவோம். ஆனால் நாம் போதனைகளை நடைமுறைப்படுத்த முனையும்போது ஏற்படும் எதார்த்த சிக்கல்களில் முடிவெடுக்க முடியாமல் தவிப்போம். அதுதான் பிற்பாடு வரலாறாக மாறுகிறது, அஞ்ஞாடியும் நமக்கு அன்பைத்தான் போதிக்கிறது. மற்ற மனிதர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள போதிக்கிறது. அந்த போதனையை ஏற்போம். அதன்வழி நடக்க முயற்சி செய்வோம். 

இன்னும் ஆயிரம் பக்கம் வேண்டுமானாலும் இதைப்பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம்!

அஞ்ஞாடி – அன்பின் போதனை 

நூல் : அஞ்ஞாடி
ஆசிரியர் : பூமணி 
வெளியீடு : க்ரியா பதிப்பகம் 
விலை : ரூ.1000-

விமர்சனம் :
ஸ்ரீமலையப்பன் பாலச்சந்திரன்,
புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...