ஞாயிறு, 17 மே, 2020

நூல் விமர்சனம் - வேள்பாரி

நன்றி கீதாம்மா!!!

பறம்பு – பாரி = நமக்கான வாழ்க்கை முறை

கிட்டத்தட்ட 2018 ஆண்டுகளுக்கு பிறகும் மனிதர்களால் அவன் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறான். அவன் வள்ளல் தன்மையையும் வீரத்தையும் பற்றி கதைகள் சொல்லப்படுக்கொண்டே இருக்கிறது. அழிவில்லா புகழ் கொண்டவன் பாரி என்பதற்கு இந்த நாவலும் ஒரு சான்று. பாரியை பற்றி நமக்கு தெரிந்ததெல்லாம் அவன் கடையேழு வள்ளல்களில் ஒருவன், முல்லைக்குத் தேர் கொடுத்தவன், இன்னும் கூடுதலாக அவனுக்கு இரு மகள்கள் அங்கவை சங்கவை என்பதும்தான்.

நாம் அறியவேண்டிய பாரியை பற்றியும் அவனுடைய அறம், இயற்கையின் மீது அவனுக்கிருந்த அறிவு, அனுபவம், அதன் மீது அவன் கொண்ட காதல், தலைவனுக்கான தகுதி, அதையும் மீறி பறம்பு மக்கள்மேல் அவன் கொண்ட பாசம், நிலத்தின் மீது அவனுக்கிருந்த பற்று, எதையும் எதிர்பாக்காத அவன் உள்ளம், உலகத்துக்கே அவன் சொல்லித்தந்த ஈகை, தன் துணையின் மேல் அவனுக்கிருந்த காதல், தன் முன்னோர்கள் மீது அவனுக்கிருந்த மதிப்பு இதையெல்லாம் விட கூடுதலாக கற்றறிந்த புலவவர்களுக்கு அவன் தந்த மரியாதை, இதையெல்லாம் இந்த தலைமுறையும் இனிவரும் தலைமுறையும் அறிய அதன் வழி நடக்க சு. வெங்கடேசன் அவர்கள் தன் உழைப்பைக் கொட்டி கண்டெடுத்த அறிய புதையல்தான் வீரயுக நாயகன் வேள்பாரி.

இதில் எதை சொல்வது எதை விடுப்பது. எதையுமே விட்டுவிட முடியாதபடி பெரும் நெருக்கடி நமக்கு. பாரியின் கதை கபிலரிலிருந்து தொடங்குகிறது. பறம்பின் மீது ஏறியதிலிருந்து பாரியும் பறம்பும் கபிலர் வாயிலாக நம்மை பறம்புக்குள்ளே கூட்டிச்செல்கிறது. அப்போது நாம் அடையும் பிரம்மிப்பிற்கு நிகர் வேறெதுவும் இல்லை. பாரி நம்மை கைபிடித்து அழைத்து சென்று ஒவ்வொரு செடியையும், இலைகளையும், மரம், பட்டை, வேர், பூ, காய், கனி, காட்டின் தட்பவெட்பம், பள்ளம், மேடு, குகை, காதல்,வீரம், என எல்லாவற்றையும் சொல்லிகொடுக்கிறார்.

மகிழ்ச்சியோடு எப்படி வாழ்வது என்பதை பறம்பு மக்களிடம்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். கதையில் வரும் ஒவ்வொரு இணையும் எது மகிழ்ச்சி என்பதை நமக்கு சொல்லித்தருகிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல, என் பாட்டியை என் பாட்டன் எவ்வாறு காதலித்தான் என்பதை நான் அவன் மூலமாகத்தானே கற்றுக்கொள்ள முடியும். வெறும் ஆடம்பரத்திலும், ஆடை அணிகலன்களிலும் காதல் பிறந்துவிடுவதில்லை. அது அன்பு செய்வதில் இருக்கிறது என்பதை வெங்கடேசன் அவர்கள் அவரின் அழகிய மொழி நடையில் வார்த்து எடுத்திருக்கிறார். முருகன்-வள்ளி, பாரி - ஆதினி, நீலன்- மயிலா, உதிரன்- அங்கவை, சூளிவேல்- தூதுவை இப்படி எண்ணற்ற இணையர்கள் அடங்கிய கதைகள் இதில் இருக்கின்றன.

பொதுவாக வெக்கை பூமியில் வாழும் மனிதர்களுக்கு இன்றுவரை மலையையும் அதன் கூறுகளையும் அறிந்துகொள்வதில் ஆர்வம் குறையவே இல்லை என்பதே நிதர்சனம். அது மூவேந்தர்களுக்கும் இல்லாமல் இருந்திருக்குமா என்ன? அந்த பேராசையின் விளைவுகளை இன்றுவரை மறைமுகமாக நாம் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறோம். வேந்தர்கள் யாரும் அப்பாவிகளுக்கு நிகழப்போகும் விளைவுகளை பற்றி கவலைகொள்வதே இல்லை. அவர்களுக்கு அதிகாரம் வேண்டுமெனில் எந்த குலத்தை அழிக்கவும் அவர்கள் அறம் தவற தயாராக இருந்திருக்கிறார்கள். புகழ் போதை அவர்களை உச்சிக்கு கொண்டுசெல்லும்போது தன்னிலை இழந்திருக்கிறார்கள். ஆனால் பாரி எந்த இடத்திலும் அறம் தவறவில்லை. அவன் உலகிற்கு எடுத்துக்கட்டாக இருந்திருக்கிறான். அவன் நம்மை பொறுத்தவரை நிஜ பாகுபலி. தலைவன் சரியாக இருந்தால் மக்கள் எந்த நிலையிலும் அவனை எவரையும் நெருங்க விட மாட்டார்கள் என்பதற்கும் பறம்பு மக்களே சாட்சி. அதற்கு உதாரணமாக தேக்கன், முடியன், பழையன், இரவாதன், நீலன், வாரிக்கையன், திரையன் என பறம்பின் ஒவ்வொருவரையும் நம் கண்முன்னே நிறுத்துகிறார் வெங்கடேசன். இவர்கள் எல்லோருடைய பாதுகாப்பையும் உறுதி செய்கிறார் பாரி. அறம் தவறாத ஒருவனால் எதையும் செய்ய முடியும் என்பதே கதையின் முடிவு.

அறத்திலிருந்து விலகாத திசைவேழர், தியாகம் செய்த பொற்சுவை, துரோகம் இழைத்த ஈக்கையன், சத்தியம் மறந்த மைய்யூர் கிழார், மேலும் இதில்வரும் கருக்கை வாணன், திதியன், சுகமதி, அலவன், கீதானி, முறியன் ஆசான், காலம்பன், முசுகுந்தர் என ஒவ்வொரு கதாபாத்திரமும் நமக்கு சொல்லித்தருவதே வாழ்க்கைப் பாடம். பெண்மையும் அவர்கள் வீரமும் இதில் போற்றப்படுவது சிறப்பு.

இதில் எனக்கு முரண்பட்ட கேள்விகளும் ஏராளம் இருக்கிறது. எழுத்தாளர் அவர்கள் சில விஷயங்களில் சமரசம் செய்தி கதையின் போக்கை மாற்றிவிடாரோ என்று தோன்றுகிறது. எது எப்படியாயினும் அவரின் இந்த பெரும் உழைப்பிற்கு எதை தந்தும் ஈடுகட்டமுடியாது. இது நிச்சயம் பரவலாக படிக்கப்படவேண்டும். தமிழனின் மொழியும் இலக்கியமும் சாகாது வாழ இது போன்ற படைப்புகள் நிறைய தேவை.

வேள்பாரியில் என்னை கவர்ந்த வாசகங்கள் :
1. ஆண் அவசரத்தின் அடையாளம், பெண் பக்குவத்தின் அடையாளம்.
2. யாருடைய கவனத்தையும் சிதைக்கும் ஆற்றல் புகழுக்கு உண்டு.
3. இயல்புதான் ஒன்றன் குணத்தை தீர்மானிக்க கூடியது.
4.காதல் சம்பந்தப்பட்டவர்களின் சாமர்த்தியத்தால்தான் கைகூடும்.
5. தீமையை கணப்பொழுதில் நன்மையாய் மாற்ற முடிகிற வல்லமை வார்த்தைகளுக்கு உண்டு.
6.நாடென்பது அரசற்ற மக்களின் ஆதிநிலம்
7. உணவு என்பது சேகரிப்பு தானே தவிர உற்பத்தி அல்ல.
8. குழந்தைகளிடம் விட்டுக் கொடுக்கும்போதும் தோற்கும் போதும் தான் ஓர் ஆண் தாய்மையை அனுபவிக்கிறான்.
9. இயற்கை வழங்குகிறது நாங்கள் வாழ்கிறோம். இடையில் விற்கவும் வாங்கவும் நாம் யார்?
10. சொல் சுடும் போது சொல்லைச் சுடுவான் புலவன்.
11. ஆண் ஆதியில் இருந்தே வெல்வதற்குத்தான் முயன்றிருக்கிறார். பெண் ஆதியில் இருந்தே நம்புவதற்குத்தான் ஆசைப்பட்டிருக்கிறாள்.
12. உரத்து சொல்லப்படுவதை விட காதோடு காதாக பேசும் கதைக்கு வயது அதிகம்.
13. இந்த கணமும் நீ தாக்கப்படலாம் ஆனால் அதற்கு முந்தைய கணம் உன்னுடையது அதில் நீ கையறுநிலையில் நின்றால் உன் குலம் ஆறோடு போகும்.
14. கடித்து இழுக்க விலங்குகளுக்கு பல் இருப்பது போல் மனிதனுக்கு கதை. கதைகள்தான் நல்லவர்களுக்கான கடைசி நம்பிக்கை.
15. பெரும் உண்மைகள் எளிய கேள்விகளுக்குள் தலை நுழைத்துத்தான் வெளிவருகின்றன.

நம் முன்னோர்கள் நமக்கு உருவாக்கித்தந்த வாழ்க்கை முறையை மறந்து வாழ்கிறோம். கற்றவர்கள் ஆங்காங்கே அவமதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள் கற்றவர்களுக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பது சொலவடையாகிவிடக் கூடாது. கபிலரும், ஒளவையும் இன்னபிற அறிஞர் பெருமக்களும் இதையெல்லாம் எழுதி வைக்காமல் போயிருந்தால் என்னவாகி இருக்கும். எனவே தான் கபிலரை பெரும்புலவர் என்கிறோம். கற்றரிந்தவர்களை போற்றி வளர்க்காத எந்த சமூகமும் அழிந்தொழியும். அப்படி இன்றைய எழுத்தாளர்களையும் நாம் போற்றி பேணி பாதுகாக்க வேண்டும். ஆட்சியாளர்கள் அறம் உணர்த்து ஆட்சி செய்ய வேண்டும். ஏழை மக்கள் நல்வாழ்க்கை வாழ வேண்டும். அப்படி வாழ்தால் பாரி போல் என்றும் இரவாப் புகழுடன் இருப்போம் என்பதில் ஐயமில்லை!

வேள்பாரி – நமக்கான வாழ்க்கை முறை

நூல் : வீரயுக நாயகன் வேள்பாரி (இரண்டு பாகங்கள் )
ஆசிரியர் : சு.வெங்கடேசன்
விலை : 1350/-
வெளியீடு : ஆனந்த விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...