வெள்ளி, 27 மார்ச், 2020

அட்டணக்கால் - நூல் விமர்சனம்

நூல் விமர்சனம் :

"அட்டணக்கால்"

அண்ணன் சோலச்சி அவர்களின் ஐந்தாவது நூல் "அட்டணக்கால்". இதற்கு முன்னால் அவர் எழுதிய நான்கு நூல்களைப் போலவே இதுவும் முழுக்க முழுக்க சமூக நோக்கத்தோடு எழுதப்பட்டிருக்கிற நூல். சமூகத்தின் மீதுள்ள கோபங்களை தன்னுடைய பேனாவை கொண்டு குத்திக் கொலை செய்து கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். இந்த நூலில் மொத்தம் 20 சிறுகதைகள் இருக்கின்றது. ஒவ்வொன்றும் மணிமணியான சிறுகதைகள். பெரும்பாலும் அவரின் மிக நெருக்கத்தில் இருக்கும் நண்பர்களின் பெயரை கதாபாத்திரங்கள் ஆக்கியிருக்கிறார். மனதிற்குள் வைத்து பூட்டியிருந்த ரணங்களுக்கு வரிகளை கொடுத்து அதை கதைகளாக வடித்து தந்திருக்கிறார். முக்கியமான இரண்டு மூன்று கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

முதலாவதாக இந்த புத்தகத்தின் தலைப்பான அட்டணக்கால். மிகுந்த வருத்தத்தையும் வேதனையும் அதேபோல தற்காலத்திலும் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் கொடுமையையும் நேரில் பார்த்தது போலவே இருக்கிறது அந்தக் கதை. அதில் வரும் முருகேசனை போல எத்தனை பேர் துயரங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்று நினைக்கும் போதே மனம் விம்முகிறது. 

இரண்டாவதாக கடைசி சாவு சிறுகதை. குடும்பத்திற்கு ஒருவர் ராணுவத்திற்கு சென்ற காலம் போய் குடும்பத்திற்கு ஒருவர் மது மீது மயக்கம் கொண்டு தங்களுடைய வாழ்க்கையையும் தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும் சீரழித்து கொண்டிருக்கக் கூடிய இந்த காலகட்டத்தில் நிரோசா போன்ற ஒரு பெண் எத்தனை துயரங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பதே கதை. அந்தக் கதையின் முடிவு எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

மூன்றாவதாக குறி . இளம் பெண்கள் தவறான ஆண்களால் எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்பதை வேறொரு கோணத்தில் கதை ஆக்கியிருக்கிறார் அண்ணன் சோலச்சி அவர்கள். 

இப்படியாக இவை அல்லாமல் இன்னும் 17 கதைகள் இன்னும் சொல்லப்போனால் 17 புதிய கதைக் களங்களை அண்ணன் தேர்வுசெய்து அசத்தி விட்டார் என்றே சொல்ல வேண்டும். குழந்தை இலக்கியத்துக்கான சியூக்கியின் பயணம் என்ற ஒரு கதையையும் முயற்சி செய்திருக்கிறார். நன்றாகவே வந்திருக்கிறது. சீக்கிரமாக குழந்தை இலக்கியத்துக்கான ஒரு சிறுகதை நூல் அவரிடமிருந்து வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள் அண்ணா.

ஒரு சாமானிய விமர்சகனாக இந்தக் கட்டத்தில் நான் சில கருத்துக்களையும் எழுத்தாளருக்கு வைக்க விரும்புகிறேன். பொதுவாக கதைக்கரு என்பது எழுத்தாளனின் குழந்தை. அந்த குழந்தை எப்படி வரவேண்டும் என்பது எழுத்தாளனின் உரிமை. இதை எந்தவொரு வாசிப்பாளனும் மறுக்க முடியாது. மாறாக ஒவ்வொரு கதையை எழுதும் போதும் வாசிப்பாளர்கள் நோக்கிலும் ஒவ்வொரு எழுத்தாளரும் சிந்திக்க வேண்டும். பள்ளிகளில் மெல்ல கற்கும் மாணவர்கள், தலைசிறந்த மாணவர்கள், சராசரி மாணவர்கள் இருப்பதைப் போலவே வாசிப்புக்கும் இந்த ரகம் உண்டு என்பது என்னுடைய கருத்து. நல்ல களத்தை தேர்வு செய்துவிட்டு தலைசிறந்த மாணவர்களுக்கு மட்டும் புரிந்துவிட்டால் போதுமென்று நினைத்து எழுதிவிட்டால் போதாது எல்லோரையும் மனதில்கொண்டு ஒரு கதைக்கருவும் ஒரு புத்தகமும் அதன் நடையும் வார்த்தைகளும் இருக்கவேண்டும் என்பது என்னுடைய எண்ணம். இதை அண்ணன் தன்னுடைய அடுத்தடுத்த களங்களில் முயற்சி செய்வார் என்று நம்புகிறேன். 

என்னுடைய தம்பி மலையப்பன் சிறந்த விமர்சகராக வளர்ந்து கொண்டிருக்கிறார் என்று முதலில் சொன்ன அண்ணனுக்கு முதன்முதலாக அவருடைய நூலுக்கு விமர்சனம் எழுதுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அன்பும் பிரியங்களும் அண்ணா. 

ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் மீதும் அதில் நடக்கும் கொடுமைகளின் மீதும் கோபம் கொள்ள வேண்டும் , அந்தக் கொடுமைகளை மாற்றுவதற்கு முயற்சி செய்யவேண்டும் என்று அட்டணக்கால் போட்டுக்கொண்டு சொல்கிறார் அண்ணன் சோலச்சி.

அட்டணக்கால் - அட்டகாசம்

நூல் - அட்டணக்கால்
ஆசிரியர் : சோலச்சி
விலை : ரூ.150/-
வெளியீடு : மின்னல் கலைக்கூடம்

விமர்சனம்:
பா. ஸ்ரீமலையப்பன்

புதன், 25 மார்ச், 2020

கொரோனா - சில தகவல்கள்

#Stay_at_home

ஊரடங்கின் முதல்நாளை ஓரளவு நிதானமாகவே தமிழக மக்கள் கடந்து இருக்கிறார்கள். ஏதோ ஒரு மனக் கட்டுப்பாட்டோடு இன்றையநாள் கழிந்திருக்கிறது. இந்தக் கட்டுப்பாட்டை இறுதிவரை கடைபிடித்து இக்கொடிய நோயை விரட்டியடிப்போம். எங்கள் பகுதியில் சுமார் ஐந்து மணி முதல் பத்து நிமிடத்திற்கு ஒரு வண்டி யாவது சென்று கொண்டிருக்கிறது. இது கொஞ்சம் வேதனையையும் வருத்தத்தையும் தருகிறது.

நீங்கள் எதற்கெல்லாம் வெளியே செல்லலாம் :

1. பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அத்தியாவசிய மருந்து மாத்திரைகள் தேவையெனில் அல்லது வீட்டில் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை எனில்

2. வீட்டிற்கு மிகுந்த மிகுந்த அத்தியாவசிய பொருள் தேவை எனில்

#குறிப்புகள்: 

1. பொருட்களை சிக்கனமாக செலவு செய்யுங்கள். 
2. காலை,மதிய, இரவு உணவுகளை எவ்வளவு சிக்கனமாக முடிக்க முடியுமோ அதை மட்டும் செய்யுங்கள். 
3. வீட்டில் தானே இருக்கிறோம் என்று பலகாரங்கள் செய்ய பொருட்கள் வாங்க கடைக்கு ஓடாதீர்கள்.
4. பரிவர்த்தனைகளை முடிந்தவரை ஆன்லைனில் செய்யுங்கள்.

இதைத் தவிர வெளியே செல்லும் என்னும் உங்களுக்கு வரவே கூடாது. இதுபோன்ற இவர் சொல்லவேண்டிய கருத்துக்களை இந்த பதிவில் தொடரலாம் அதையும் இணைத்துக் கொள்வோம்.

#அன்புடன்:
பா. ஸ்ரீமலையப்பன்

#Stay_at_home
#Stay_away_from_Corona

செவ்வாய், 24 மார்ச், 2020

Stay_away_from_Corona

#Stay_at_home
#Stay_away_from_Corona

எந்த மாதிரியான விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மக்கள் தங்கள் சொந்த முடிவுகளை மட்டுமே எடுக்கிறார்கள். கூட்டமாக இருக்க வேண்டாம் என்று சொன்னால் வெள்ளம் போல் பேருந்துகளை சுற்றிக் கொண்டு நிற்கின்றார்கள்.

 இக்கொடிய நோய் எவ்வாறெல்லாம் பரவும் என்று எவ்வளவு எடுத்துரைத்தாலும் அதை மக்கள் கேட்பதாக இல்லை. சென்னை மற்றும் பிற பகுதிகளிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவதிலேயே குறியாக இருக்கிறார்கள். 

நாம் தனித்தும் நம் குடும்பம் வேறொரு இடத்தில் இருப்பதும் மிகுந்த வேதனையான ஒன்றுதான். ஆனால் எங்கேயோ இருந்த கொரோனாவை நீங்களே கொண்டு வந்து உங்கள் வீட்டிற்குள்ளும், உங்கள் ஊருக்குள்ளும் திணித்து விடப்போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

தயவு செய்து நீங்கள் இப்பொழுது இருக்கும் இடத்திலேயே இருங்கள். இக்கொடிய நோயிலிருந்து வெளியே வர இந்த கடின சூழ்நிலையை நாம் கடந்துதான் வர வேண்டும்.

அன்புடன்:
ஸ்ரீமலையப்பன்

திங்கள், 23 மார்ச், 2020

சூல் - நூல் விமர்சனம்

*நூல் விமர்சனம்:*

*"சூல்" - சோ.தர்மன்*

*அதிக வரிகள் இருப்பதால் படிக்க மாட்டேன் என்று கடப்பவர்கள் நிச்சயம் படியுங்கள்.*

*இந்த புத்தகத்தை பரிசளித்த என் அன்பு தம்பி அரவிந்த ஹரிஹரனுக்கு என் அன்பும் பிரியங்களும்!*

*இதோ நான் எழுதுவதைப் படித்து விட்டு கொஞ்ச நேரம் கற்பனை செய்து பாருங்கள் இவ்வளவு அழகாக இருந்திருக்கிறது இவ்வுலகம் என்பது உங்களுக்குப் புரியும்.*

நீங்கள் காலையில் எழுந்திருக்கிறீர்கள், உங்கள் வீட்டின் முன்னால் இருக்கும் வேப்ப மரத்தின் மீது ஏறி வேப்பங்குலையை ஒடித்து பல் துலக்குகிறீர்கள், கொட்டகைக்குள் முளை குச்சியில் கட்டியிருக்கும் மாட்டை அவிழ்த்துக் கொண்டு வயலுக்கு செல்கிறீர்கள், பயிருக்கு நீர் பாய்ச்சி விட்டு உங்கள் துணையின் வரவுக்காக மாமரத்தின் கீழ் காத்துக் கிடக்கிறீர்கள், உங்கள் துணை மதிய சாப்பாட்டை கூடையில் வைத்து தலையில் சுமந்து கொண்டு வருகிறார், அந்த மரத்தின் கீழே உட்கார்ந்து அன்பாக உணவு பரிமாறுகிறார், இருவரும் இணைந்து சாப்பிடுகிறீர்கள், ஒரு கயிற்றுக் கட்டில் அங்கேயே கிடைக்கிறது, அதில் சிறிது நேர உறக்கம், மாலை எழுந்து மேய்ச்சலில் இருந்த மாடுகளை பிடித்துக்கொண்டு வீட்டிற்கு செல்கிறீர்கள், உங்கள் அண்டை வீட்டாருடன் உட்கார்ந்து சிறிது நேரம் அரட்டை, பின்னர் இரவு உணவை அக்கம்பக்கத்தாரோடு உட்கார்ந்து பகிர்ந்துண்டு பின்னர் இரவு உறக்கத்திற்கு செல்கிறீர்கள். எப்படி இருந்திருக்கிறது இவ்வுலகம்? அடடா!

அப்பொழுதும் சாதிகள் இருந்திருக்கிறது. எல்லோரும் ஒற்றுமையாக தான் இருந்திருக்கிறார்கள், சண்டைகளும் கூட வந்திருக்கிறது ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் நடந்திருக்கிறது. மனிதர்கள் மனிதர்களாக பார்க்கப்பட்டு இருக்கிறார்கள். ஆடுமாடுகள், புழு பூச்சிகள், கம்மாய் கரைகள், வயல்வெளிகள், ஆறு கடல்கள், மலை முகடுகள், செடி கொடிகள், பயிர் வகைகள் அத்தனையையும் அவர்கள் அன்பு செய்திருக்கிறார்கள். சத்தியத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்திருக்கிறார்கள். அப்பொழுதும் உயர்ந்த சாதியிலிருந்து தாழ்ந்த சாதி வரை இருந்திருக்கிறது. ஆனால் அனைவருக்கும் ஒன்று தெரிந்திருக்கிறது, இந்த உலகத்தில் எல்லோரும் எல்லாரையும் சார்ந்துதான் வாழ வேண்டும் என்ற நியதியை கடைபிடித்து அன்போடு வாழ்ந்திருக்கிறார்கள். 

அந்த உலகத்தில் அன்பு ஒன்றே பிரதானம். உணவில்லாமல் ஒருவர் இருக்கவே இல்லை. எல்லோர் வீடும் எல்லோருக்காகவும் திறந்தே இருந்திருக்கிறது. மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள். ஊருக்காக யாரெல்லாம் உயிர் விட்டார்களோ அவர்களே அவர்களது தெய்வங்களாக மாறி இருக்கிறது. வேறு யாரையும் அவர்கள் கையெடுத்துக் கும்பிட வில்லை. மிகுந்த அறிவாளிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் இயற்கையை காதலித்து இயற்கையை வழிபட்டு இயற்கையை மகிழ்வித்து இருக்கிறார்கள். இயற்கையும் அவர்களை காதலித்து அவர்களை வழிபட்டு அவர்களை மகிழ்வித்து அன்பு செய்து இருக்கிறது. 

ஒரு ஊர்தான் கதை இந்த நூலில். நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்த ஒரு ஊர் இந்த 21 ஆம் நூற்றாண்டில் எப்படி மாறிப் போயிருக்கிறது என்பதை நம் கண்முன்னே காட்டி வாழ்க்கை பற்றிய பயத்தை அதிகம் கூட்டியிருக்கிறது. வேறு மாதிரி சொல்லப்போனால் எப்படி எல்லாம் இருக்க வேண்டிய நாம் இப்படி எவன் கையையோ அண்டிப் பிழைக்கும் அடிமைகளாக, எது மகிழ்ச்சி என்றே தெரியாமல் மகிழ்ந்து கொண்டிருக்கும் ஜடங்கலாக நாம் மாறி விட்டோம் என்று வெட்கித் தலைகுனிய வைப்பதாக இந்நூல் அமைந்திருக்கிறது.

இந்த நூலில் வரும் கதாபாத்திரங்களை இந்த கால குழந்தைகள் கண்டதே இல்லை. நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள் மீது இவ்வளவு அன்பு செய்ய முடியுமா என்பதை இந்த நூல் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. இப்போது நாம் நம்மை சுற்றி இருப்பவர் மீது காட்டும் அன்பெல்லாம் என்ன அன்பு?  நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கும் கல்வி எல்லாம் என்ன கல்வி? 

கோடி கோடியாய் செலவு வைத்து கல்வி கற்று நம் பிள்ளைகள் மண்ணை நோண்டியா திங்க போகிறது? பிள்ளைகளுக்கு எது தேவை என்பதை சொல்லிக் கொடுப்பதற்கு தான் இந்த புத்தகம். நீங்கள் யார் என்பதை கேள்வி கேட்டு பதில் தேடுவதற்கு தான் இந்த புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும். அந்த வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வை கொஞ்சமேனும் நீங்கள் வாழ்ந்து பார்த்துவிட்டால் இந்தப் பிறவி எடுத்ததன் பயனை நீங்கள் நிச்சயமாக அடைய முடியும். இந்தப் புத்தகம் 500 பக்கங்களைக் கொண்டது. முதல் 250 பக்கங்கள் பக்கம் பக்கமாக உங்களை அழ வைக்கும் அடுத்த 250 பக்கங்கள் இந்த சீரழிவுக்கு நீங்கள் எவ்வாறு ஆளானீர்கள் என்பதை எடுத்து வைக்கும். 

மனிதனின் வஞ்சகமும், சூழ்ச்சியும், போட்டி பொறாமையும், கெட்ட எண்ணமும் எப்படி உங்களை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது, நாம் இவ்வளவு வருந்தி வேதனைப்பட்டு வாழ்வதற்கு எது  ஆரம்பமாய் இருந்தது என்பதை முகம் காட்டும் கண்ணாடியாக எடுத்துரைக்கிறது சோ. தர்மன் அய்யா அவர்களின் "சூல்" என்னும் இந்நூல். பிரித்தாளும் சூழ்ச்சியால் மக்களை எப்படி மாக்களாக மாற்றினார்கள் என்பதை சொல்லும் கதை. அறிவாளிகள் பேராசையினால் அழிவுற்றதன் கதை. நிழல் எது நிஜம் எது என்பதை உங்களுக்கு உணரவைக்கும் கதை. இது நம் கதை. நம் மண்ணின் கதை. 

சோ. தர்மன் அவர்களுக்கு இந்த நூலுக்காக எத்தனையோ விருதுகளும், பரிசுகளும், மாலை மரியாதைகளும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் நீங்கள் அவருக்கு விருது கொடுக்க நினைத்தால் ஒரே ஒரு கண்மாயை தூர் வாருங்கள். கொஞ்சமேனும் விளைநிலங்கள் வாங்கி அதில் பயிரிடுங்கள். உங்கள் அண்டை மனிதர்களோடு கொஞ்சமேனும் அன்பாய் இருங்கள். ஒரு கோடி விருது கொடுத்ததற்குச் சமம். நிச்சயமாக இந்த நூலை வாங்கிப் படியுங்கள். நண்பர்களுக்கு பரிசளியுங்கள். இயற்கை பற்றி தெரிந்தவர்கள் இளம் தலைமுறைக்கு அடுத்த தலைமுறைக்கும் இயற்கை சொல்லி கொடுத்து விட்டுப் போங்கள். அதுவே இந்த உலகம் சுவாசிப்பதற்கு ஒரே வழி. 

அதிகமான வாசிப்பு கூட்டங்களையும் விமர்சன கூட்டங்களையும் இந்த நூலுக்காக அமைக்க வேண்டிய பொறுப்பு இலக்கிய மன்றங்களுக்கு இருக்கிறது.

*சூல் - இது கதையல்ல நிஜம்!*

*நூல் : சூல்*
*ஆசிரியர் : சோ. தர்மன்*
*விலை : ரூ.380/-*
*வெளியீடு : அடையாளம் பதிப்பகம்*

*விமர்சனம் :*
*பா.  ஸ்ரீமலையப்பன்*

செவ்வாய், 17 மார்ச், 2020

அபிதா - குழந்தை - நூல் விமர்சனம்

நூல் விமர்சனம் : 

"அபிதா"

1970 -இல் எழுதப்பட்ட ஒரு நாவல். இந்த நாவலின் கதையையும் அதன் தன்மையையும் உற்று நோக்கினால் சற்று விசித்திரமான அனுபவம் தான். ஏனெனில் லா.ச.ரா இதை தன்னுடைய 54 ஆவது வயதில் எழுதியிருக்கிறார். இன்னும் ஆராய்ந்தால் இது அவரது சொந்த கதையாகவோ அல்லது மிக நெருங்கிய வரின் கதையாகவோ இருக்க வாய்ப்பிருக்கிறது. இது அவருடைய இரண்டாவது நாவல். அந்த காலத்தில்  புதிய எழுத்து நடை அவருடையது.

ஒருவன் தான் வாழும் சமூகம் எப்படி இருந்தது? எப்படி இருக்கிறது ? எப்படி இருக்கும் ? எப்படி இருக்க‌ வேண்டும் என்ற உணர்வுகளின் வெளிப்பாட்டை அதன் இலக்கியத்தினையும் , கலைகளையும் கொண்டு அறிந்து கொள்ளலாம். இவை இரண்டையும் சமூகத்தின் சாட்சியங்களாக நான் பார்க்கிறேன். இந்த கூறுகளின் அடிப்படையிலேயே லா.ச.ரா வின் 'அபிதா' வை பார்க்கிறேன்.

ஒரு ஆணின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருக்கிறது இந்த நாவல். ஒரு வேளை பெண்ணின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருந்தால் அக்குவேர் ஆணி வேராக பிரித்து தொங்கவிட்டிருக்கலாமோ என்னவோ. உணர்வின் பெரும் போராட்டமாகவும் இதை நான் கருதவில்லை.  1970 இன் எதார்த்த வாழ்வியலை நாவலின் மூலம் பதிவு செய்திருப்பதாகவே கருதுகிறேன். 

ஒரு ஆணுக்கு பெண்ணின் மீதான பார்வை என்பது அந்த காலம் தொட்டு இன்றுவரை ஒரு சதவீதம் கூட மாறவில்லை என்பதை நாவலின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய கால ஓட்டத்தில் பார்த்தால் இன்றைய பெண்களின் நிலை அன்றைவிட  மிக மோசமானதாகவே இருக்கிறது. அது என்ன மோசம் எனில் ? அது நீங்கள் அறிந்திராததா என்ன!!! கடைசி காட்சியில் அபிதா மீது விழும் பொன்னரளி போல்  பெண்கள் மென்மையானவர்களாக இருக்கிறார்கள். பற்றி எரிந்து கொண்டிருக்கும் வண்டி போல் ஆண்கள் அவர்களை எட்டி நின்று எரித்துக் கொண்டிருக்கிறார்கள். ( எல்லா ஆண்களுக்கும் பொருந்தாது). 

நாவல் நிறைய வர்ணனைகளோடு , அதுவும் நீங்கள் இதுவரை கண்டிராத வர்ணனைகளோடு, உவமைகளோடு இருக்கிறது. புதிய வாசிப்பாளர்களுக்கு கொஞ்சம் இச் கொட்டும் ரகமாக இருக்கும். நீங்கள் வாசிப்பதை அனுபவிப்பவர்கள் எனில் இது உங்களுக்கு கிளாசிக் ரகம். வாழ்க்கை என்பது எதார்தங்களின் ஊற்று.  அதை புரிந்து கொள்ளவதும் புரிய வைப்பதும் சவாலான ஒன்று. அதை தன்னுடைய எழுத்து பாணியில் சமரசம் செய்து கொள்ளாமல் நமக்கு தந்திருக்கிறார் லா.ச.ரா‌. 

அபிதா - குழந்தை

நூல் : அபிதா
ஆசிரியர் : லா.ச.ரா
விலை : ரூ.90/-
வெளியீடு : பற்றினை பதிப்பகம்

விமர்சனம்: 
பா. ஸ்ரீமலையப்பன்




வியாழன், 12 மார்ச், 2020

நூல் அறிமுகம் :இந்திய கல்விப் போராளிகள்

நூல் விமர்சனம்:

"இந்திய கல்விப் போராளிகள்"

நான் எழுதும் எழுத்துக்களை மின் விசிறிக்கு கீழோ அல்லது குளிரூட்டப்பட்ட அறையின்  இருக்கையிலோ அல்லது பஞ்சு மெத்தையில் படுத்துக் கொண்டோ படித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் பெற்ற கல்வி அவ்வளவு  சாதாரணமாக உங்களுக்கு வாய்த்துவிடவில்லை.  ஏராளமான சமூக சீர்திருத்தவாதிகளின் , உண்மையான கல்வியாளர்களின் இரத்தத்திலும் மரணத்திலுமே இத்தகைய கல்வியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதை உணரவைக்கும் புத்தகம்தான் ஐயா 'ஆயிஷா‌' இரா. நடராஜன் அவர்கள் எழுதிய இந்த "இந்தியக் கல்வி போராளிகள்".

இந்தப் புத்தகத்தில் மொத்தமாக 22 கல்விப்  போராளிகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. அவர்கள் தங்கள் வாழ்வில் எவ்வளவு இன்னல்களை சந்தித்து இந்திய மண்ணில் உள்ள சாதாரண மனிதனுக்கும் தங்கள் இரத்தத்தை சிந்தி கல்வியை வழங்கியிருக்கிறார்கள் என்பதை கூறுவதாக இந்த நூல் அமைந்துள்ளது. ஒவ்வொருவரைப் பற்றிய செய்திகளை படிக்கும் போதும் உண்மையில் ஒரு ஆசிரியனாக வெட்கித் தலை குனிகிறேன். 

மாணவர்களுக்கு கல்வியில் ஏதோ ஒரு சிறிய மாற்றத்தை பள்ளியில்  கொண்டுவர நாம் போராடுகிறோம். அதில் சிறு தொய்வோ இடையூறோ ஏற்பட்டுவிட்டால் துவண்டு விடுகிறோம் அல்லது இடையூறு ஏற்படுத்துபவரை வசைபாடி விட்டு அந்த வேலையை பாதியிலேயே விட்டு விடுகிறோம். ஆனால் இந்த புத்தகத்தில் இருப்பவர்களை பற்றி நீங்கள் படித்து விட்டால் இனி எத்தனை பெரிய இடையூறுகள் வந்தாலும் அதை சமாளிக்க கூடிய பக்குவம் உங்களுக்கு வந்துவிடும். நாம் பள்ளியில் தான் போராடுகிறோம் ஆனால் இந்தப் புத்தகத்தில் இருப்பவர்களோ ஆங்கிலேய கம்பெனி அரசாங்கத்திடம், சக இந்திய மனிதர்களிடம், மதவெறியர்களிடம், ஜாதி கூட்டங்களிடம் போராடியிருக்கிறார்கள். போராடியவர்கள் மட்டுமல்ல தங்கள் போராட்டத்தில் வெற்றி கண்டவர்கள். 

பெக்ராம்ஜி மலபாரரி குழந்தை திருமணங்களை தடுத்து அவர்களை பள்ளிகளில் சேர்த்தவர், அடிப்படை கல்வி மாணவர்களுக்கு தேவை என்பதை உணர்த்திய கவுரி பார்வதி பாய், ஆசிரியர் பயிற்சியை இந்தியாவுக்கு அறிமுகம் செய்த ஈஸ்வர சந்திர  வித்யாசாகர், முதன்முதலில் குல கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த சாயாஜிராவ் கெய்க்வாட், இந்தியக் கல்வியின் பிரம்மாண்ட கலகவாதி என்று கூறப்பட்ட கேஷப் சந்திர சென், கட்டாய இலவசக் கல்வியின் முதல் போராளி கோபால கிருஷ்ண கோகலே, பெண்கல்வியின் ஜான்சிராணி என்று போற்றப்படுகிற ரமாபாய் ரானடே, இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடங்கிவைத்த ஜாம்ஷெட் ஜிஜி பாய், தலித் மக்களை பொதுக்கல்விக்குள் புகுத்தி விட்ட அய்யன்காளி இப்படியாக இன்றும் நம் பாடபுத்தகத்தில் அறிமுகப்படுத்தாத சாதனை மனிதர்களைப் பற்றிய புத்தகம்தான் இது.

ஒருவேளை நீங்கள் ஆசிரியர் என்றால் நிச்சயமாக உங்கள் புத்தக அலமாரியில் இருக்க வேண்டிய புத்தகம் இது. நீங்கள் பெற்றோர் என்றால் ஒருமுறையேனும் படித்து விடவேண்டிய புத்தகம் இது. நீங்கள் ஆட்சியாளர்கள் என்றால் இதைப் படித்துவிட்டு உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி கல்விமுறையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியது உங்கள் பொறுப்பு. 

நம் போதிக்கும் கல்வி முறை ஒன்றே நம் அடுத்த தலைமுறையை இந்த பூமியில் மகிழ்ச்சியாக வாழ வைக்க முடியும் என்பதை உணரவைத்த ஐயா ஆயிஷா நடராஜன் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்!!!

இந்திய கல்விப் போராளிகள் - துதிக்கப்பட வேண்டியவர்கள்

நூல் : இந்திய கல்விப் போராளிகள்
ஆசிரியர் : 'ஆயிஷா‌' இரா. நடராஜன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ. 100/-

விமர்சனம்: 
பா.‌‍‌ ஸ்ரீமலையப்பன்

வெள்ளி, 6 மார்ச், 2020

தூப்புக்காரி

*நூல் விமர்சனம் :*

*தூப்புக்காரி*

134 பக்கங்களில் 1340 முறை உங்களை அழ வைக்க , நம் மனம் என்னும் பாறைக்குள் இருக்கும் ஈரத்தை எழ வைக்க முடிந்ததால்தான் என்னவோ சாகித்திய அகாடமியின் இளம் எழுத்தாளருக்கான விருதை வென்ற நாவலாக இது கொண்டாடப்பட்டு இருக்கிறது. நிச்சயமாக திரைப்படமாக எடுத்துவிட வேண்டிய கதை.
 
நாம் அதிகாலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் குடலை பிடுங்கும் குப்பை நாற்றத்தையும் , சாக்கடை நாற்றத்தையும், மல நாற்றத்தையும் பொறுக்க முடியாமல் பொறுத்துக்கொண்டு நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் சுத்தக்காரர்களின் கதை இந்த *"தூப்புக்காரி".*

வீட்டு விஷேசங்களில் எச்சல் இலை எடுக்கும் சகோதர சகோதரிகளை நடு பந்தியில் உட்கார வைத்து விருந்தோம்பல் செய்ய முடியாத சமூகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்று வேதனை பட்டுக்கொண்டே பல நூற்றாண்டுகள் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. வேதனை படுகிற பல இதயங்கள் தனக்கென்று வரும்போது தானும் அதையே செய்ய கூசுவதில்லை. சாதியில் தாழ்ந்தவர்கள் என்று சமூகத்தால் ஒதுக்கப்படுபவர்கள் கூட இவர்களை மனிதரிலும் கீழாகவே நடத்துகிறார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை என்பதை தன் நாவலின் மூலமாக உலகிற்கு உரக்க சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் மலர்வதி .

வாழ்க்கையை போராடியே வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்காக இவர்களின் உரிமைகளுக்காக போராட வேண்டிய கட்டாயமும் பொறுப்பும் நமக்கிருக்கிறது என்பதை கூரிய தன் பேனா முனை கொண்டு நம் அத்தனை தலைகளிலும் ஓங்கி குத்தியிருக்கிறார். 

 கனகம், பூவரசி, மாரி, ரோஸ்சிலி கதாபாத்திரங்களை வாசிக்கும் பொழுது  நாம் அன்றாடம் சந்திக்கும் எதார்த்த மனித உருவங்கள் உங்கள் மனக்கண்ணில் தோன்றுகிறார்கள் என்றால் நிச்சயமாக இனியாவது நீங்கள் கொண்டாடப்பட வேண்டிய மனிதர்கள் அவர்கள்தான் என்பதை கன்னியாகுமரி வட்டார வழக்கில் வாழ்க்கையை ரணமாக வாழ்ந்து கொண்டிருக்கும்  அந்த ஈர இதயம் கொண்ட எளிய மனிதர்களின் வாழ்வியலை தன் பேனாவில் கண்ணீர் ஊற்றி எழுதி புத்தகமாக நம் கைகளில் தந்திருக்கிறார் மலர்வதி அவர்கள். 

வாழ்க்கையே சோகம், சோகமே வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மனிதர்களுக்காக ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பை அறிவியல் உலகம் சீக்கிரம் செய்தே தீர வேண்டும். 

இன்னும் எளிமையாக அவர்கள் வாழ்வை புரிந்து கொள்ள வேண்டும் எனில் ஒரே ஒருநாள் தூப்புக்காரியாக வாழ்ந்து பார்த்து விடுங்கள் புரியும்.

தூப்புக்காரி - அழகானவள்

*நூல் : தூப்புக்காரி*
*ஆசிரியர் : மலர்வதி*
*விலை : ரூ. 95/-*
*வெளியீடு : மதி*
                         
*விமர்சனம்,*
*பா.ஸ்ரீமலையப்பன்*

புதன், 4 மார்ச், 2020

அப்பல்லோ : மக்களின் கதை

*நூல் விமர்சனம் :*

*அப்பல்லோ*

இந்த வருடத்தின் முதல் புத்தக விமர்சனம் அண்ணன் அண்டனூர் சுரா அவர்களின் “அப்பல்லோ” நாவல். பொதுவாக எது ஒன்று புதைக்கப்படுகிறதோ அது நிச்சயமாக ஒருநாள் தோண்டி எடுக்கப்பட்டே தீரும் என்பதே வரலாறு. அது நிலக்கரியாகவோ, தங்கமாகவோ, பெட்ரோலாகவோ, தாதுக்களாகவோ, கட்டிடங்களாகவோ, எலும்புக் கூடுகளாகவோ , மனித நாகரீகங்களாகவோ வெளிப்பட்டே தீரும். நம் கீழடி போன்றும், ஆதிச்சநல்லூர் போன்றும் ஏதோ ஒரு காலத்தில் யாரோ ஒருவரின் முயற்சியின் மூலமாக மக்களை சென்றடையும். இதற்கு கதைகளும் விதிவிலக்கல்ல. நாம் மறந்து போன கதைகளையும் சிந்திக்க தவறிய மருத்துவ குறிப்புகளையும் தன்னுடைய பேனாவை கூர்தீட்டி மீட்டு கொண்டுவந்திருக்கிறார்  “அப்பல்லோ” நாயகன் அண்டனூர் சுரா.

கிரேக்க கதாபாத்திரங்களை கொண்டு தமிழகத்தின் தற்காலத்தை புத்தகத்தின் பக்கங்களில் தவழவிட்டிருக்கிறார். ஒவ்வொரு அத்தியாத்திலும் பரபரப்பை கூட்டியிருக்கிறார். இதில் அவர் பயன்படுத்தி இருக்கும் உருவகங்களும், ஒவ்வொரு காட்சிக்கான வசன நடையும் புத்தகத்திற்கு மேலும் மெருகூட்டி இருக்கிறது. எழுத்தின் முதிர்ச்சி மேலும் கூடியிருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவ்வளவு அழகாக கையாண்டு இருக்கிறார். 

நாவல் நான் லீனியராக செல்கிறது. ஒரு இடத்திலிருந்து மீண்டும் அவ்விடத்திற்கு வரும்போது எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் கதை நகர்கிறது. ஒரு சாமானிய வாசகனின் பார்வையில் சொன்னால் சில அத்யாயங்களை தவிர்த்திருந்தாலும் கதை தொய்வடையாது இருந்திருக்கும். இந்தகால குழந்தைகளுக்கு பரிச்சயப்படாத தமிழ் வார்த்தைகள் நிறைந்து இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த நாவலில் எனக்கு பிடித்த வாக்கியங்களை வரிசைபடுத்த விரும்புகிறேன்`
1. கொடியை காற்று அசைக்கலாம் காற்றை யார் அசைப்பது?
2. கற்கண்டை தின்றால் செரிக்கும் கல் செரிக்குமா ?
3. அழகி என்ற பதத்தின் ழ அவள்!
4. உண்மைக்கு தேவை தடிப்பு. பொய்க்கு தேவை நடிப்பு.

இப்படியாக படித்து ரசிக்க ஏராளமான சொலவடைகள், வர்ணனைகள் நிறைந்து இருக்கிறது நாவல். கவிஞனின் வகை, ஒரு அரச குழந்தையை பராமரிக்கும் தாயின் வகை, மருத்துவக்குடி சொல்லும் மருந்தின் வகை, இளைஞர்கள் கொண்டாடும் மீசையின் வகை என நாவலை வகை வகையாக பிரித்து தள்ளியிருக்கிறார்.  இன்னும் கூடுதலாக சொன்னால் அவருடைய வார்த்தைகள் என் மனக்கண்ணில் காட்சியாக மாறிய அத்தருணங்களை நான் எழுதுகிற இந்த நிமிடத்தில் வாசிப்பின்பத்தை  மீண்டும் மீட்டெடுத்துக்கொள்கிறேன். 

ஒரு சமூகம் இறுதியாக யாரை நம்புகிறது மருத்துவர்களை. நம்மை பொறுத்தவரை நம் உயிரை காக்கும் மருத்துவர்களே  மக்களின் கண்ணுக்கு தெரிந்த கடவுளர்கள். நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் தான் நம் வாழ்வாதாரத்தை காக்கும் மருத்துவர்கள். இந்த இருவருக்குமான பொறுப்புகள் என்ன என்பதை தற்காலத்திற்கு ஏற்ப தன்னுடைய எழுத்தின் மூலம் மிகுந்த பொறுப்புடன் லாவகமாக கையாண்டிருக்கிறார் அண்ணன் அண்டனூர் சுரா.

*அப்பல்லோ : மக்களின் கதை*

நூல் : அப்பல்லோ 
ஆசிரியர் : அண்டனூர் சுரா 
விலை : ரூ 240/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

புகைப்பட உதவி : Dr. Hafila

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...