*நூல் விமர்சனம் :*
*தூப்புக்காரி*
134 பக்கங்களில் 1340 முறை உங்களை அழ வைக்க , நம் மனம் என்னும் பாறைக்குள் இருக்கும் ஈரத்தை எழ வைக்க முடிந்ததால்தான் என்னவோ சாகித்திய அகாடமியின் இளம் எழுத்தாளருக்கான விருதை வென்ற நாவலாக இது கொண்டாடப்பட்டு இருக்கிறது. நிச்சயமாக திரைப்படமாக எடுத்துவிட வேண்டிய கதை.
நாம் அதிகாலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் குடலை பிடுங்கும் குப்பை நாற்றத்தையும் , சாக்கடை நாற்றத்தையும், மல நாற்றத்தையும் பொறுக்க முடியாமல் பொறுத்துக்கொண்டு நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் சுத்தக்காரர்களின் கதை இந்த *"தூப்புக்காரி".*
வீட்டு விஷேசங்களில் எச்சல் இலை எடுக்கும் சகோதர சகோதரிகளை நடு பந்தியில் உட்கார வைத்து விருந்தோம்பல் செய்ய முடியாத சமூகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்று வேதனை பட்டுக்கொண்டே பல நூற்றாண்டுகள் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. வேதனை படுகிற பல இதயங்கள் தனக்கென்று வரும்போது தானும் அதையே செய்ய கூசுவதில்லை. சாதியில் தாழ்ந்தவர்கள் என்று சமூகத்தால் ஒதுக்கப்படுபவர்கள் கூட இவர்களை மனிதரிலும் கீழாகவே நடத்துகிறார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை என்பதை தன் நாவலின் மூலமாக உலகிற்கு உரக்க சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் மலர்வதி .
வாழ்க்கையை போராடியே வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்காக இவர்களின் உரிமைகளுக்காக போராட வேண்டிய கட்டாயமும் பொறுப்பும் நமக்கிருக்கிறது என்பதை கூரிய தன் பேனா முனை கொண்டு நம் அத்தனை தலைகளிலும் ஓங்கி குத்தியிருக்கிறார்.
கனகம், பூவரசி, மாரி, ரோஸ்சிலி கதாபாத்திரங்களை வாசிக்கும் பொழுது நாம் அன்றாடம் சந்திக்கும் எதார்த்த மனித உருவங்கள் உங்கள் மனக்கண்ணில் தோன்றுகிறார்கள் என்றால் நிச்சயமாக இனியாவது நீங்கள் கொண்டாடப்பட வேண்டிய மனிதர்கள் அவர்கள்தான் என்பதை கன்னியாகுமரி வட்டார வழக்கில் வாழ்க்கையை ரணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஈர இதயம் கொண்ட எளிய மனிதர்களின் வாழ்வியலை தன் பேனாவில் கண்ணீர் ஊற்றி எழுதி புத்தகமாக நம் கைகளில் தந்திருக்கிறார் மலர்வதி அவர்கள்.
வாழ்க்கையே சோகம், சோகமே வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மனிதர்களுக்காக ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பை அறிவியல் உலகம் சீக்கிரம் செய்தே தீர வேண்டும்.
இன்னும் எளிமையாக அவர்கள் வாழ்வை புரிந்து கொள்ள வேண்டும் எனில் ஒரே ஒருநாள் தூப்புக்காரியாக வாழ்ந்து பார்த்து விடுங்கள் புரியும்.
தூப்புக்காரி - அழகானவள்
*நூல் : தூப்புக்காரி*
*ஆசிரியர் : மலர்வதி*
*விலை : ரூ. 95/-*
*வெளியீடு : மதி*
*விமர்சனம்,*
*பா.ஸ்ரீமலையப்பன்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக