செவ்வாய், 5 ஜூலை, 2016

டிஸ்லெக்ஸ்சியா - விரட்டியடிப்போம்

 இன்றைய பதிவில் நான் எடுத்துக்கொண்ட பகுதி ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் சம்மந்தமானது. இதைப் படிக்கும் நீங்கள் உங்களுக்கு தெரிந்த ஆசிரிய பெருமக்களிடம் இது பற்றி கலந்துறையாடியும் , நீங்கள் ஆசிரியர்களாகவோ அல்ல இந்த பகுதியை பற்றிய ஆராய்ச்சியாளராகவோ இருந்தால் மேற்கொண்டு அறிவுரையும் ஆலோசனைகளையும் பதிவிடவும் ...

ஆசிரியர் எவ்வாறு உதவ வேண்டும் ?

    ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பல வழிகளில் உதவ முடியும். நம்மிடம் பயிலும் மாணவர்களின் பாடம் தொடர்பான அவர்களது பலத்தையும் , பலவீனத்தையும் , தேவைகளையும் காண்பதன் மூலம் அவர்கள் உண்மையாகவே பாதிக்கப்பட்டார்களா என்பதை கண்டறிதல் வேண்டும். 

      இதோ உதாரணத்திற்கு என்னுடைய வகுப்பில் ஒரு மாணவனை கண்டறிந்த சான்றுப் படம் ... 


(சான்று)


   பொதுவாக நம்முடைய கண்ணோட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் டிஸ்லெக்ஸ்சியா குறைபாடுடையவர்களாக தோன்றுவார்கள். அப்படி நீங்கள் நினைத்தால் அது தவறு ! மெதுவாகக் கற்கும் மாணவர்களையும் நாம் குறைபாடுடையவர்களாக கருதிவிடுவதே அதற்கு காரணம். 


உண்மையாகவே குறைபாடுடைய மாணவர்களை எவ்வாறு கண்டறிவது ?


 அவர்களது தேவைகளை அறிந்து அதற்குத் தகுந்த பாடத்திட்டங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். சாதாரண மாணவர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சியிலிருந்து வேறுபட்டு புதிதான அவர்களுக்கென்று பாட திட்டத்தை உருவாக்க வேண்டும்.


அவர்களுக்கு மனனப் பயிற்சியளித்து பின்னர் பொருள்களுக்கான காரணங்களையும் கருத்துருக்களையும் விளக்க வேண்டும். அவர்களது இயக்க குறைபாடுகள் , சிந்திக்கும் திறன் இதன்மூலமே வளர்ச்சியடையும். 


(உங்களுடைய  மைன்ட் வாய்ஸ்களை கேட்க முடிகிறது... நீ எழுதுவது எங்களுக்கும் தெரியும் அதற்கான நேரம்தான் எங்களிடம் இல்லை என்றுதானே கேட்க வருகிறீர்கள் ?)


   ஒரு நிமிடம் சிந்தியுங்கள் உங்கள் குழந்தைகள் இத்தகைய பாதிப்பில் இருந்தால் என்ன செய்வீர்கள் ? உண்மையாகவே டிச்லெக்ஸ்சியா குறைபாடுடைய குழந்தைக்குத் தேவை அவர்களை அடிக்கடி உற்சாகமூட்டுவதும் , அவர்களுடன் விளையாடுவதும் , கதைசொல்வதும், அவர்கள்மீது நீங்கள் அக்கறையுடையவர்கள் என்று அவர்களை உணரவைப்பதுமே இந்த சவாலில் நீங்கள் வெற்றிபெறும்  வழியாகும். எத்தகைய வழிகளில் அவர்கள் குறைபாடுடையவர்கள் என்று நீங்கள் புரிந்துகொண்டால் அவர்களை சரி செய்வது மிகவும் எளிது.


ஆசிரியர்கள்  எப்படியெல்லாம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் ?


௧. அவர்களுடைய உணர்வுகளை கவனித்து அவர்களுக்கு ஊக்கம் அளித்தல் வேண்டும். உதாரணமாக அவர்களுடைய கோபம் , அழுகை , வெறுப்புணர்ச்சிகளை கண்டறிதல். இத்தகைய குறைபாடுடைய மாணவர்களிடம் மொழியறிவு குறைவாக இருப்பதால் தனக்கு என்ன பிரச்சனை என்பதைக்கூட சொல்ல முடியாமல் தவிப்பார்கள். அவர்களை கண்டறிந்து சரி செய்தல் வேண்டும்.


௨. அவர்கள் மதிப்பெண்களைவிட மதிப்பினையே உயர்வாக கருதுவதாக கூறுகிறது ஆய்வு. நீங்கள் அவர்களுக்கு வழங்கும் குறைவான மதிப்பெண்களைவிட அவர்களை "முட்டாள்கள் ", "திருந்தாதவர்கள் ", "சோம்பேறிகள் ", உன்னால் எதுவும் செய்ய முடியாது ", " நீ எதற்கும் லாயக்கு இல்லை " என்ற வார்த்தைகள் அவர்களை ரணப்படுத்துவதோடு அவர்களை தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களாக மாற்றி தோல்வியாளர்களாக்கிவிடுகிறது.


௩. இந்த மூன்றாவது செய்திதான் முக்கியமாக ஆசிரியர்கள் மனதில் உள்வாங்கவேண்டிய செய்தி. டிஸ்லெக்ஸ்சியா குறைபாடுடைய மாணவன் தனக்கென்று ஒரு வெற்றிபெறக்கூடிய இலக்கை நிர்ணயம் செய்ய மாட்டான். ஆசிரியர்தான் அவர்களுக்கான துரிதமாக வெற்றிபெறக்கூடிய இலக்கை நிர்ணயம் செய்துகொடுத்தல் வேண்டும்...


என்ன நண்பர்களே இன்றைய செய்தி பயனுள்ளதாக இருக்குமென்று நினைக்கிறேன் !!! அடுத்த பதிவில் மாணவர்களுக்கு என்ன பயிற்சிகள் அளிப்பதன் மூலம் அவர்களை வெற்றியாளர்களாக மாற்றலாம் என்பதை தருகிறேன் !!!!


நன்றியுடன் ஸ்ரீ  


வெள்ளி, 1 ஜூலை, 2016

டிச்லெக்ஸ்சியா - கற்றல் குறைபாடு

“If they don’t learn the way we teach, can we
teach them the way they learn?”
Dr Harry T. Chasty


    என்னவொரு அருமையான வாசகம்!!! நாம் கற்றுக்கொடுக்கும் வழியில் அவர்களால் கற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் நாம் ஏன் அவர்கள் வழியில் சென்று கற்றுக்கொடுக்கக் கூடாது என்று வினா எழுப்புகிறார் ஹாரி சாஸ்டி..


    இந்தியாவில் மொத்தமாக 10-15 %  பள்ளி செல்லும் மாணவர்கள் கற்றலில் குறைபாடு உடைய மாணவர்கள் என்று கூறுகிறது MDA ஆய்வு. அதாவது ஒரு வகுப்பறையில் 40 மாணவர்கள் இருந்தால் அதில் சராசரியாக ஆறு மாணவர்கள் கற்றல் குறைபாடு உடையவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த ஆறு மாணவர்களும் டிஸ்லெக்ஸ்சியாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. இதில் மெதுவாக கற்கும் மாணவர்களும் அடங்குவர். 


 ஆரம்பத்திலேயே டிஸ்லெக்ஸ்சியா குறைபாடு உடையவராக கண்டறியப்பட்டால் அவர்களை வெகு விரைவிலேயே சரி செய்துவிட முடியும்.

  டிஸ்லெக்ஸ்சியாவா குறைபாடு உள்ள மாணவர்கள் கீழ்கண்ட வகைகளில் பாதிக்கப்பட்டிருப்பர்:

௧. கவனக்குறைவு ஏற்படுதல் .

௨. வாசித்தலில் குறைபாடு 

௩. உடல் இயக்க அசைவுகளில் குறைபாடு 

௪. மொழியாற்றளில் குறைபாடு 

௫. பேசுவதில் பிரச்சனை

௬. சமூகம் சார்ந்த செயல்களில் குறைபாடு 

௭.கணிதத் திறன் இல்லாமை 

௮. தாய்மொழி மற்றும் இரண்டாம் மாற்று மொழிகளை கற்றுக்கொள்வதில் சிரமம் 

௯. இதற்கு அப்பாற்பட்டு நினைவாற்றல் , ஒத்துழைக்காமல் இருப்பது போன்ற மன நலம் சார்ந்த செயல்களில் குறைபாடு உடையவர்கள்.


   பெரும்பாலாக டிஸ்லெக்ஸ்க் குழந்தைகள் வாசித்தல், எழுதுதல் மற்றும் கணிதத் திறன்களில் குறைபாடு உடையவர்களாகவும், மேலும் மேற்குறிப்பிட்ட அனைத்துமோ அல்ல அதில் சிலவோ உள்ளவர்கள் இந்த குறைபாடு உடையவர்களாக கண்டறியப்படுகின்றனர்.

        சாஸ்டி சொல்வதைப்போல் நம்முடைய வழியில் அவர்களால் கற்றுக்கொள்ள முடியாது அவர்கள் வழியில் நாம் கற்றுக்கொடுத்தால் இருவருக்குமே வெற்றி நிச்சயம்!!!

இன்னும் விரிவாக நாளை !!!

நன்றியுடன் ஸ்ரீ ...

வியாழன், 30 ஜூன், 2016

டிஸ்லெக்ஸ்சியா - நோய் அல்ல

      இன்றைய நாள் தீவிர தொண்டைக்கட்டுடன் ஆரம்பித்தது. காலை ௧௦ மணிக்கு அறந்தையில் ஆசிரிய பெருமக்களுக்கு , ஒன்பதாம் வகுப்பில் உள்ள டிஸ்லெக்சியா  குழந்தைகளை கண்டறிவது எப்படி எனபது பற்றிய ( டிஸ்லெக்ஸ்சியா எனபது பற்றி அறிய நீங்கள் ஆமீர் கான் நடித்த தாரே சாமின் பர் என்ற படம் பார்த்தல் நலம் ) பயிற்சி அளித்தாக வேண்டிய சூழ்நிலை. 

  என்னசெய்வதென்று புரியாமல் தவிப்புடன் பயிற்சிக்கு கஸ்தூரி சார் அவர்களுடன் சென்றிருந்தேன். ஒருவேளை அங்கு செல்லும்போது வாயிலிருந்து வெறும் காற்று மட்டும் வந்தால் எல்லாத்தையும் மேலே இருக்கவர் பார்த்துக்கொள்வார் (கஸ்தூரி சார்) என்ற மனநிலையுடன் சென்றுவிட்டேன். ஒரு சின்ன மனதைரியம் என்னவென்றால் ஒரு மணி நேரம் தான் பயிற்சி அளிக்க வேண்டும். 


   எங்கள் வண்டி  பள்ளியின் முன்கேட்டில் நுழைந்தபோதே அங்கு இருந்தவர்கள் நல்ல இரண்டு அடிமைகள் சிக்கிவிட்டதாகவே எங்களை எண்ணியது  அங்கு அமர்ந்த பின்பு என் மரமண்டைக்கு புரிய வந்தது காலம் செய்த கோலம். சரி நடந்தது நடந்துவிட்டது சரி பயிற்சி பற்றிய செய்திக்கு வருகிறேன்.டிஸ்லெக்ஸ்சியா என்பது  குறைபாடுதான். மாறாக அது நோய் அல்ல என்பது என்னுடைய புரிதல். கற்றலில் அதுவும் வாசித்தலில் , எழுதுதலில் , கணிதத்திறனில் ஏற்படும் ஒருவகை குறைபாடு. இவர்கள் சாதாரணமாக இவர்கள்  பாடங்களை கற்பதில்தான் குறைபாடுடைய மாணவர்கள் மற்றபடி மற்ற மாணவர்களைவிட வேறு சில திறன்களில் முற்போக்கானவர்கள். 


உதாரணமாக இவர்கள் செய்யும் தவறுகள் எழுத்துக்களை மாற்றி எழுதுவது அதாவது (PIT = BID) என எழுதுவது , வாசிக்க தெரியாமல் இருப்பது, சோம்பேறித்தனமாக இருப்பது போன்ற சிலவகை பிரச்சனைகளை மட்டுமே உடையவர்கள். 


இவர்களை சரி செய்வது எப்படி என்பதை பற்றி MDA ( Madras dyslexia assosiation ) ஒரு கையேடை தயாரித்து  பள்ளிக்கல்விதுறையிடம் கொடுத்துள்ளது. டிஸ்லெக்ஸ்சியா பற்றிய இன்னும் விரிவான கட்டுரை மற்றும் அவர்களை சரி செய்யும் வழிமுறைகள் பற்றிய கூறுகளையும் ஆராய்ந்து அது  பற்றிய விரிவான அலசல்களுடன் அடுத்த பதிவில் வருகிறேன் ...

நன்றியுடன் ஸ்ரீ 

புதன், 29 ஜூன், 2016

அவளுக்கானது - கவிதை

உன் ரோபாடிக் 
அசைவுகளில் 
எக்ஸ்டிரா 
அழகூட்டி 
நிற்கிறாய் !!!

உன் மூளையெனும் 
புராஸ்சஸரில் 
மில்லியன் பைட்களாய்
பதிவாகிட 
அலைகிறேன் !!!

உன் நியூரல் ஸ்கீமாவில் 
ஊடுருவ 
இக்கணமே 
இடம் தா !!!


உன் 
பைனரிகளில் 
என்னை 
சேமித்துக்கொள் !!!


இலக்கிய ரோபோ நீ 
உன்னை 
வியக்க 
வைக்கும் 
மலை நான்!!!


ஆக்கிரமித்துக்கொள் !
நம் அடுத்த 
வெர்ஷனை 
அப்கிரேட் 
செய்வோம் !!!


உன் மனமென்னும் 
மோட்டாரின் 
சிக்கல்களை 
டிரபுல்ஷூட் 
செய்துகொள் !!!


அநாவசியத்தை 
அன்னின்ஸ்டால் 
செய்ய 
அனுமதி கொடு !!!


நம்மை 
இங்கே 
டிஸ்மேன்டில் 
செய்ய 
எவராலும் 
முடியாது !!!


என் 
அப்டேட்களுக்காய்
காத்திருக்கும் 
பெண்ணே 
பிடி !!! 


என்
டெராபைட்களில் 
ஐ லவ் யூ

டெடிகேட்டட் டூ மை ஸ்வீட்டி 


- ஸ்ரீ 

செவ்வாய், 28 ஜூன், 2016

லெமூரியக் கண்டத்து மீன்கள் - நூல் அறிமுகம்

லெமூரியக் கண்டத்து மீன்கள்       சற்றேறக்குறைய  இந்த வருட்டத்தின் ஆரம்பத்தில் ஆன்மன் சார் அவர்களின் நட்பு வட்டத்திற்குள் நுழைந்திருந்தேன். புகழ்ச்சிக்காக அல்ல அவரின் கவிதை வரிகளுக்குள் எப்பொழுதுமே ஏதோ ஒரு காந்த சக்தியை உள்ளே வைத்து புதைத்து வைத்திருப்பார். அது நம்மை இழுத்து அந்த கவிதைக்குள்ளிருந்து வெளியே வரவிடாமல் செய்யும். 


 இப்பொழுதும் அதேதான் நடந்தது. ஆன்மன் சார் அவர்களிடமிருந்து நேற்றுதான் அவருடைய அன்பு பரிசாக லெமூரியக் கண்டத்து மீன்கள் கிடைக்கப்பெற்றேன். பொள்ளாச்சி இலக்கிய வட்ட வெளியீடு. ஒரு கவிதை புத்தகத்தை வாசிக்க குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது நான் எடுத்துக்கொள்வதுண்டு. இது அப்படியான புத்தகம் அல்ல நண்பர்களே. முதல் பக்கத்தை வாசிக்க தொடங்கிவிட்டீர்கள் எனில் அனைத்தையும் வாசித்து, சுவாசித்து முடித்துதான் வைப்பீர்கள். அனைத்தும் அக்மார்க் கவிதைகள். 


 உள்ளே உள்ள ஒவ்வொரு கவிதைக்கான அதிகபட்ச மெனக்கெடல் தெரிகிறது. வாழ்த்துக்கள ஆன்மன் சார். சரி லெமூரியக் கண்டத்து மீன்களில் உள்ள சின்ன சின்ன சுவாரஸ்யங்களை பார்ப்போம்.

உயிர்ப்பு என்ற தலைப்பில் 
காற்றை  
          நிற்பந்திக்காதே 
          நூலைக் கைவிடு 
          பறக்கட்டும் 
          பட்டம் 

இடிந்தகரை பற்றிய ஒரு அருமையான கவிதை 
திமிங்கிலங்களாக 
          உருமாறி 
          கரை ஒதுக்கி 
          நிலம் புகுகின்றது 
          புதைக்க இடம் மறுக்கப்பட்ட 
          அணுக்கழிவு 

தனிமை பற்றிய கவிதை 
அபத்தமாய் 
          இருக்கிறது 
          தனிமையை 
          தனிமையெனச்
          சொல்வது  
     
இப்படி பல்வேறு  தலைப்புகளையும் லெமூரிய கண்டத்து மீன்கலாக்கி நீந்த விட்டிருக்கிறார். வாங்கி படியுங்கள் முடிப்பதற்குள் நீங்களும் நிச்சயம் ஒரு கவிதை எழுதலாம். 
விலை ரூ  50/-. தேங்கியூ ஆன்மன் சார்.

லெமூரியக் கண்டத்து மீன்கள் - கலர் கலராக நீந்துகின்றன .

ஆசிரியர் : ஆன்மன்
தொலைபேசி : 8760052320
இ-மெயில்  : aanmanchennai@gmail.com
விலை : ரூ 50

நன்றியுடன் ஸ்ரீ .

வியாழன், 23 ஜூன், 2016

வைகறை வைகறை !!!

வைகறை வைகறை 

இது அவரின் முகநூல் கணக்கின் பெயர்... இன்றும் தொடர்பில் இருக்கிறார் கணிக்கின் வழி... ஆனால் ?


மணி கிட்டத்தட்ட  மாலை ஆறு...

ஒரு நண்பரின் வீட்டின்முன் நின்றுகொண்டிருந்தேன்... என்னுடன் வந்த நண்பரின் அலைபேசி ஒலித்தது. எடுத்த மறுநொடியே அதிர்ச்சியான வார்த்தைகளை முனுமுனுத்துக்கொண்டிருந்தார்.

என்ன என்ற நான் கேட்ட  அடுத்த நொடியில் வைகறை சார் நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்றார் ????

அதிர்சியடைத்து உறுதிபடுத்துவதற்குள் புதுகையை கடந்து உண்மையிலேயே எங்களை பிரிந்து எங்களிடம் சொல்லாமல் அவரின் சொந்தஊரை நெருங்கியிருந்தார் அண்ணன் வைகறை.

என்னை எழுத தூண்டிய மனிதர். முதன்முதலில்  என்னை வீதிக் கூட்டத்தில் கவிதை வாசிக்க வைத்த  மனிதர். விதைக்கலாம் 25 நிகழ்வில்  தானே முன்னின்று  பல முன்னெடுப்புகளை செய்த மனிதர். என்னுடைய சொந்த வாழ்வின் பல நிலைகளில் என்னைப்பற்றி கவலைப்பட்டவர்களில் வைகறை அண்ணனும் ஒருவர். 

இறந்த இரண்டு நாட்களுக்கு முன் அலைபேசியில் பேசிக்கொண்டோம். அப்பொழுதுகூட அவர்  ஏதும் சொல்லவில்லை என்னிடம்?

 மருத்துவமனையில் அவதியுறும்போது அதன் வழியாக பல முறை சென்றேன் அப்பொழுதும் தெரியவில்லை அவர் அங்குதான் இருக்கிறார் என்று ?

எங்களின் கண்முன்னே காலத்திடம்  ஒரு பெறும் கவிஞனை தொலைத்துவிட்டோம் !!! 
எங்களின் நட்பையும் அன்பையும் நிருபிக்கும் வழியாக அந்த மாகவிஞனின் அன்பு மகனுக்கும் அவர் குடும்பத்திற்கும் உதவும் நோக்கில் அவர் மகனின் பெயரில் ஒரு சேமிப்பை ஏற்படுத்த ( FIXED DEPOSIT ) புதுகை வீதி இலக்கியக்களம் மற்றும் கணினி தமிழ்ச்சங்கம் ஒன்றிணைந்து இதுவரை 1,79,000 திரட்டியிருக்கிறது... 

எங்களின் இலக்கு 5,00,000....

இதுவரை வைகறை அண்ணனுக்காக நிதிவழங்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு நீங்களும் உங்களால் இயன்ற ஒரு தொகையை தருமாறு விழைகிறேன்....

அந்த கவிஞனின் பெயர் நிலைத்திருக்கட்டும் உங்களால்...


நிதியளிக்க விரும்புவோர்கள் கீழ்க்கண்ட கணக்கிலேயே வரவு வைக்கலாம்.

First Name        : MUTHU BASKARAN

Last Name         : N
Display Name      : MUTHU BASKARAN N
Bank              : STATE BANK OF INDIA
Branch            : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number    : 35154810782
Branch Code       : 16320
IFSC Code         : SBIN0016320
CIF No.           : 80731458645

நிதி அளிப்பவர்கள் இந்த மின்னஞ்சலிலும் தெரிவித்தால் அறிவிக்க வசதியாக  இருக்கும்.
vaigaraifamilyfund@gmail.com

மிஸ் யூ வைகறை அண்ணா !!!செவ்வாய், 21 ஜூன், 2016

தூக்கி எறியப்பட்ட சொற்கள் - வீதி 28

வீதி இலக்கியக் களம்  - புதுக்கோட்டை 


       கடந்த ஞாயிறு (20-06-2016) அன்று நடைபெற்ற வீதி இலக்கியக் கூட்டத்தில் நான் வாசித்த கவிதை :

தூக்கி எறியப்பட்ட சொற்கள் 


ஜென் போன்றதொரு 
ஆழ்ந்த தியானத்தில்
எச்சிலை விழுங்கியப்படியும் 
பேனாவின் பின்புறம் 
பற்களால் சிற்பம் செய்தபடியும் 
காத்திருந்தேன் 
அவளுக்கான சொற்களுக்காய்  ...... 

இரவில் மொட்டைமாடி நடையிலும் 
ஹெட்செட் வழி இசையிலும் 
உறங்காத உறக்கத்திலும் 
காத்திருந்தேன் 
அவளுக்கான சொற்களுக்காய்...

காலை கனவில்  
மலையில் நடந்தபடியும் 
குளத்தில் கல்லெறிந்தபடியும்
தூரலில் நனைந்தபடியும் 
காத்திருந்தேன் 
அவளுக்கான சொற்களுக்காய்...


நினைவுகளை 
பேனாவில் ஊடுருவச்செய்து 
வார்த்தைகளாக்கி 
மைவழி சிதறச்செய்ய   
காத்திருந்தேன் 
அவளுக்கான சொற்களுக்காய்...

செவிகளில் 
ரீங்காரமிடும் சொற்களை 
பொறிக்கியெடுத்தும் 
சுற்றி வந்து தர்க்கம் செய்யும்
சொற்கள் தாண்டியும்  
காத்திருந்தேன் 
அவளுக்கான சொற்களுக்காய்...

உருண்டு பிரண்டும் 
உருக்கிச் சேர்த்தும்
உன்னதமாய் இல்லையென 
தூக்கியெறிந்தேன் 
உனக்காக எழுதப்பட்ட 
ஆயிரம் சொற்களை....
                                                       --பா . ஸ்ரீமலையப்பன்