புதன், 27 நவம்பர், 2019

காற்று வாசித்த கவிதை - நூல் அறிமுகம்


ஒருமுறையேனும் பொள்ளாச்சி இலக்கிய வட்ட கூட்டத்திற்கு போய் வரவேண்டும் என்று பலமுறை நினைத்துக்கொள்வேன். இன்றுவரை அதற்கான வாய்ப்பு அமையவில்லை. 

இன்று என்னுடைய புத்தக அலமாரியை வெகுநேரமாக பார்த்துகொண்டு நின்றேன். பொள்ளாச்சி இலக்கிய வட்டத்திலிருந்து 2016 ஆவது ஆண்டு வெளிவந்த கோகிலா வேலுச்சாமி அவர்களின் "காற்று வாசித்த கவிதை" கண்ணில்பட்டது. கடந்த ஐந்தாறு மாதங்களில் தொடர்ச்சியாக நான் சிறுகதைகளையும் நாவல்களையும் மட்டுமே வாசித்து வந்திருக்கிறேன்.

கவிதை புத்தகம் வாசிப்பது என்பது மிகவும் அலாதியான ஒன்று.  கவிதை வாசிப்பது என்பது ஒரு கலை. யாரும் இல்லாத ஒரு அமைதியான இடத்தில் ஒரு மௌனியின் நிலையில் அமர்ந்து மெல்ல புத்தகத்தைப் பிரித்து ஒவ்வொரு கவிதையாக, சூடான தேநீரை மிடறு மிடறாக ரசித்து பருகுவதை போல்தான் ஒரு கவிதை புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கவிதைகளையும் வார்த்தை வார்த்தையாக அனுபவித்து ரசித்து ருசித்து படிக்க வேண்டும். அப்படிப் படிப்பதையே நான் எப்போதும் விரும்புவேன்.

கோகிலா அவர்களின் முதல் தொகுப்பு இது. மிகச்சிறந்த கவிதைகளை அவர்கள் செய்யாவிட்டாலும் அவரது வார்த்தை பிரயோகங்கள் அருமையாக இருக்கிறது. அவரது வார்த்தைகளின் மூலம் அவருடைய சமூக கோபத்தை புரிந்துகொள்ள முடிகிறது. என்னுடைய பார்வையிலிருந்து கோகிலா அவர்களின் கவிதைகளை பார்க்கும் போது அவர் ஹைக்கூ பக்கம் இந்த கவிதைகளை திருப்பினால் நிச்சயமாக நமக்கு நிறைய பயனுள்ள கவிதைகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஒரு ஆங்கிலக் கவிதையை தமிழில் மொழிபெயர்த்து இருந்தார் அந்த கவிதை மிக அருமையாக இருந்தது. இந்த புத்தகத்திற்கான விமர்சனத்தை எழுதும் இந்த தருணத்தில் இன்னும் வேறு சில கவிதை நூல்களை அவர் படைத்திருக்கலாம். அப்படி எதேனும் இருப்பின் அதையும் படிக்க விரும்புகிறேன். இந்த தொகுப்பு நிச்சயமாக தொடக்க வாசிபாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். இப்படியான இளம் படைப்பாளர்கள் மேலும் மேலும் நிறைய கவிதைகளை படைக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. 

இந்த தொகுப்பில் என்னை கவர்ந்த இரண்டு கவிதைகள் : 
1. பிரார்த்தனை இல்லா
    பாதயாத்திரை
    எறும்புக்கூட்டம்.

2.  குழந்தை பசியாறியதும்
      ஊர்கூடி ஒப்பாரி
      கள்ளிப்பால் விருந்து

வாழ்த்துக்கள் கவிஞர் கோகிலா அவர்களுக்கு.

நூல் : காற்று வாசித்த கவிதை
ஆசிரியர் : கோகிலா வேலுச்சாமி 
வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
விலை : ரூ.50/-

விமர்சனம் : 
                 ஸ்ரீமலையப்பன் பாலச்சந்திரன், 
                 புதுக்கோட்டை 

திங்கள், 25 நவம்பர், 2019

கிளியோபாட்ரா - நூல் அறிமுகம்

கிளியோபாட்ரா - நூல் அறிமுகம்

பொதுவாக வரலாற்று நூல்கள் படிக்க படிக்க மிகவும் ஆர்வமாக இருக்கும். அப்படித்தான் கிளியோபாட்ரா வின் வரலாற்றை படிக்கும் சந்தர்ப்பம் இந்த நூலின் ஆசிரியர் முகிலின் வாயிலாக கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

இந்த உலகின் மாபெரும் இரண்டு அரசர்களான ஜூலியஸ் சீசரும்  , மார்க் ஆண்டனியும் ஒரு பெண்ணின் முன்னாள் வீழ்ந்து கிடந்திருக்கிறார்கள் என்றால் ஒரு அரசி தன்னுடைய அழகால் மட்டும் அவர்களை வீழ்தியிருக்க முடியாது  என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஒருவேளை அவளுடைய அழகை கொண்டுதான் ரோம் என்னும் பெரும் சாம்ராஜ்யத்தின் இரு வீரர்களை அடக்கிவிட்டால் என்பது உண்மையாக இருந்தால் அவள் எவ்வளவு பெரிய பேரழகியாக இருந்திருக்க வேண்டும் என்றும் பிரம்மிக்க  தோன்றுகிறது. நிச்சயமாக 2000 வருடத்திற்கு முன்னால் ஒரு பெண் இவ்வளவு தைரியமாக இருந்திருக்கிறார் என்றால் அவளை நான் சாதாரணமாக எண்ணிவிட முடியாது. 2000 வருடங்களாக அவளுடைய பெயர் ஏதோ ஒரு ரூபத்தில் உச்சரிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது இதோ இன்று என் மூலமாக உச்சரிக்கப்படுகிறது.

கிளியோபாட்ராவின்  தந்தையான பன்னிரண்டாம் தாலமிக்கு நாம் ஒருவகையில் நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும். ஏனெனில் தன்னுடைய இரண்டு மகள்களையும் கல்வி கற்க அனுமதித்திருந்தார். ஒருவேளை கல்வி கற்றதனால் தான் என்னவோ புத்தி சாதுரியத்தால் இரண்டு மாபெரும் வீரர்களை தன்னுடைய மனோ தைரியத்தாலும் ராஜா தந்திரத்தாலும் கிளியோபாட்ரா வீழ்த்தியிருக்கக்கூடும். கல்வி கற்காமல் போயிருந்தால் வரலாறு மாறி இருக்குமோ என்னமோ.

இன்னும் கொஞ்சம் விளையாட்டாக அதிகப்படியாக சொல்லபோனால் அலெக்சாண்டர் என்ற மாபெரும் வீரன் இல்லாமல் போயிருந்தால் தாலமி இல்லாமல் போய் இருப்பார், ஜூலியஸ் சீசர், மார்க் ஆண்டனி, புரூட்டஸ், கிளியோபாட்ரா, அகஸ்டஸ் போன்ற எவரும் இல்லாது போயிருப்பர்.

போகட்டும் புத்தகத்தில் உள்ள சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

1. அலெக்ஸாண்டர் எகிப்து படையெடுப்பின்போது எகிப்தை வெற்றி கொண்டு அங்கே அலெக்ஸாண்ட்ரியா என்ற அழகான நகரத்தை நிறுவியிருக்கிறார்.

2. அலெக்ஸாண்டிரியாவில் பன்னிரண்டாம் தாலமியால் ஒரு அழகான அருங்காட்சியகம் அவற்றோடு கூடிய நூலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது இந்த நூலகத்தில் தான் கிளியோபாட்ராவும் அவளது அக்காவான பெரினைசும் கல்வி கற்றிருக்கிறார்கள்.

3. எகிப்தியர்கள் தங்களுடைய சொந்த சகோதரர்களே திருமணம் செய்துகொள்ளும் வழக்கத்தினை கொண்டிருந்திருக்கிறார்கள்.

4. ரோமில் செல்வந்த குடும்பத்தில் பிறந்த மார்க் ஆண்டனி கேபினியஸ் என்ற துணைத்தளபதி மூலம் தற்செயலாகத்தான் ரோம் படையில் சேர்ந்து இருக்கிறார்.

5. அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாட்ரா குளிப்பதற்காக 700 கழுதைகள் வளர்க்கப்பட்டு இருக்கிறது. பணியாளர்கள் காலையில் எழுந்து கழுதைப்பால் சேகரிக்க வேண்டுமாம். தொட்டியில் நிரப்பப்பட்ட பாலில் கிளியோபாட்ரா குளிப்பாறாம்.

5. எகிப்து நாட்டை அரசாட்சி செய்ய தன்னுடைய பதினொரு வயது சகோதரன் பதிமூன்றாம் தாலமியை மணந்து முதன்முதலில் அரியணை ஏறினால் கிளியோபாட்ரா.

6. கிளியோபாட்ரா ஜூலியஸ் சீசரிடம் நெருங்கி பழகும் போது ஜூலியஸ் சீசருக்கு வயது 52 கிளியோபாட்ராவுக்கு 23 வயதுதான். ஜூலியஸ் சீசர் மூலமாக கிளியோபாட்ராவுக்கு சீசரியன் என்ற மகன்  பிறந்தான்.

7. தன்னுடைய தினசரி உணவில் விஷம் கலந்து இருக்கிறதா என தெரிந்துகொள்ள ஒரு அடிமையை வைத்து அவள் முதலில் சாப்பிட்ட பிறகு தான் அதை கிளியோபாட்ரா சாப்பிடுவாராம்.

8. ஜூலியஸ் சீசர் குறுங்கத்தியால்   23 இடங்களில் குத்தி கொல்லப்பட்டார். இதை உறுதி செய்தவர் மருத்துவர்
அண்டிஸ்டியஸ். முதலில் குத்தியவர் சிம்பர் என்ற உறுப்பினர். ஜூலியஸ் சீசர் இறந்த பிறகு கிளியோபாட்ரா மனம் கொதித்து போய் ரோமில் இருந்து வெளியேறினார்.

9. எகிப்தியன் கோப்ரா வகை சேர்ந்த கொடிய விஷம் உள்ள நஜா வகை பாம்பை தன்னுடைய மார்பின் மீது கடிக்க விட்டு இறந்து போனால் என்பது சொல்லப்படும் செய்தி.

இப்படி கிளியோபாட்ரா என்ற மாபெரும் பேரழகியின் வாழ்க்கையை கூறுவதாக அமைந்திருக்கிறது இந்த புத்தகம். மிக அரிய தகவல்களை இந்த நூல் நமக்கு வழங்குகிறது. கிளியோபாட்ராவை பற்றி மேலும் நீங்கள் அறிந்து கொள்ள எலிசபெத் டெய்லர் 1963 ல் நடித்த கிளியோபாட்ரா படம் யூடியூபில் நமக்கு கிடைக்கிறது.

எல்லா வரலாறுகளும் நமக்கு ஏதோ ஒரு பாடத்தை வழங்குகின்றன. கிளியோபாட்ராவும் அதற்கு விதிவிலக்கல்ல.

நூல் : கிளியோபாட்ரா
ஆசிரியர்:  முகில்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ.175/-


 அன்புடன் ,

             ஸ்ரீமலையப்பன் பாலச்சந்திரன்


திங்கள், 11 நவம்பர், 2019

முன்னோடி - நூல் அறிமுகம்

சமீபத்தில் படித்து முடித்திருப்பது  கலில் ஜிப்ரான் அவர்களின் முன்னோடி என்ற  புத்தகம்.  தமிழில் மொழிபெயர்த்து இருப்பது கவிஞர் இளவல் ஹரிஹரன். அருமையான கவிதைகள் மற்றும் குட்டி குட்டி கதைகள்  இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது. படிப்பதற்கு மிகவும் அலாதியான புத்தகம். இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும் போது  உங்களுக்குள்ளேயே ஒரு கவிதை எழுதும் திறன் மிகச் சாதாரணமாக வந்து விடும், மனம் மிகுந்த அமைதியையும் தனிமையையும் தேடும்.

கலில் ஜிப்ரான் கவிதைகளை உங்களால் எளிமையாக புரிந்துகொள்ள முடியும் என்றால் நிச்சயமாக முடியும். கவிதைகளின் ஜீவன் உங்கள் உயிரோடு கலந்து  மிகுந்த மன அமைதியை  ஏற்படுத்தவல்ல  வார்த்தைகள்  கதையிலும் கவிதையிலும் நிறைந்திருக்கிறது .

மிகுந்த தீர்க்கதரிசனமான வார்த்தைகளை மிகவும் எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி எழுத்தின் தரம் மாறாமல்  கவிதைகளின் சாரம் குறையாமல் ஒரு அருமையான மொழிபெயர்ப்பை கவிஞர் இளவல் ஹரிஹரன் தந்திருக்கிறார். கவிதைகளை முழுமையாக உள்வாங்காமல் இத்தகைய வார்த்தைகள் வந்து விழுவதற்கு வாய்ப்பே இல்லை.

மனித வாழ்வின் எதார்த்தத்தை இந்த நூல் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. மனிதனின் ஆசை, பொறாமை, வஞ்சம், கோபம், வாழ்வில் நிலையில்லாத தன்மை  இப்படி பல்வேறு தலைப்புகளில் கதைகளும் கவிதைகளும் இருக்கிறது.  கலில் ஜிப்ரான் எழுத்துலகின் ஒரு தீர்க்கதரிசி என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.  நிச்சயமாக இந்த புத்தகத்தின் தலைப்பு போல் அவர் நமக்கு முன்னோடியாக தான் இருக்கிறார்.

நூல் : முன்னோடி
ஆசிரியர் : கலில் ஜிப்ரான்
தமிழில் : கவிஞர் இளவல் ஹரிஹரன்
பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம்
விலை : ரூ. 40

திங்கள், 4 நவம்பர், 2019

பாரதி நினைவுகள் - நூல் அறிமுகம்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் ஷாஜகான் சார் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து ஒரு செய்தியைப் பார்த்தேன் , "பாரதியார் நினைவுகள்" புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தை  அவர் பதிவாகி எழுதி அந்தப் புத்தகம் வேண்டுமானால் நான் 
ராஜாமகள் அவர்களை இன்பாக்ஸில் தொடர்பு கொள்ளவும் என்று சொல்லி இருந்தார்.  உடனே நான் ராஜா மகள் அவர்களை இன்பாக்ஸில் தொடர்புகொண்டு பாரதி நினைவுகள் புத்தகத்தையும்  பூனைகுட்டிகாரன் புத்தகத்தையும் குரியர் மூலமாக பெற்றேன். இப்போதுதான் அந்த புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது.  

இந்தப் புத்தகத்தின் வாயிலாக பாரதியாரை மிக அண்மையில் நெருங்கி அவரை புரிந்துகொள்ள முடிகிறது. அவரைப் புரிந்து கொண்டேன் என்பதைவிட பாரதியாரின் மனைவி செல்லம்மாள் அவர்களை சிறிதாவது புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு அமைந்ததை எண்ணி மகிழ்கிறேன்.  செல்லம்மாள் அவர்கள் பாரதியார் பாடும் பாடல்களின் முதல் ரசிகை என்பது நமக்கு தெரியவருகிறது. இந்தப் புத்தகத்தின் ஒரு இடத்தில்கூட பாரதியார் அவர்கள் ஒரு பாடலை பாடுகிறார் அது செல்லம்மாள் அவர்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. எத்தனை ரசிகையாக இருந்தால் அந்த கண்ணீர் வந்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். ஆரம்ப காலகட்டத்தில் பாரதியார் கலகலப்பாகவும் மிகுந்த உற்சாகம் உடையவராகவும் இருந்திருக்கிறார், பிற்பாடு பலநாட்கள் மௌன விரதங்களை மேற்கொண்டிருக்கிறார்.  இந்த நூலின் ஆசிரியர் யதுகிரி அம்மாள் பாரதியாரின் இந்த மௌன விரதத்தை பற்றிச் சொல்லும்போது " அவர் மேற்கொண்ட மௌன தவமே அவர் இத்தனை காவியமான கவிதைகளை எழுதுவதற்கு காரணமாக அமைந்திருக்கும் என்று பிற்பாடு தாம் உணர்ந்ததாக கூறுகிறார்.  இந்தக் கூற்றை நாம் இப்போது ஆராயும்போது இக்கால கவிஞர்களும் மிக ரசனையான கவிதைகள் எழுத மலைகளுக்கும், கடற்கரைக்கும் சென்று வருவதை காண்கிறோம். மௌனம் மிகச் சிறந்த கவிதைகளை ஜனிக்கும் என்பது பாரதியார் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது. 

மிக முக்கியமாக இந்தப் புத்தகத்தின் வாயிலாக பாரதியார் அவர்கள் மிகச்சிறந்த குரல் வளத்தை கொண்டவர் என்றும் அருமையாக பாடல் பாடுபவர் என்றும் நாம் அறிய முடிகிறது அதேசமயம் செல்லம்மா கேட்டாலும், தங்கம்மா கேட்டாலும், சகுந்தலா கேட்டாலும், யதுகிரி கேட்டாலும் மிகுந்த வாஞ்சையோடு அவர் அவர்களுக்காக பாடல்களைப் பாடியிருக்கிறார்.  ஒருசமயம் முருகேசன் பிள்ளை என்பவரது மகன் ராஜ்பகதூர் வெளிநாட்டிலிருந்து கடல்மார்க்கமாக வந்துகொண்டிருந்தபோது இறந்துவிட்டானென ஒரு தந்தி வருகிறது. மகன் வருவான் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த முருகேசன் பிள்ளை இந்த செய்தி கேட்டு மூர்ச்சையாகி பின்னர் படுத்த படுக்கையாகி விடுகிறார்.  அந்த தம்பதியினரை தேற்றுவதற்காக பாரதியார் பாடல்களைப் பாடுகிறார். அந்த பாடல்களை கேட்டு சிறிது நேரமாவது அந்த தம்பதியினர் ஆசுவாசம் கொள்கின்றனர். மனிதர்கள் மீது மனிதன் கொண்டவர் பாரதியார் என்பது இதன் மூலம் திண்ணமாகிறது. 

இப்படி யதுகிரி அம்மாள் தனக்கு அருகாமையில் இருந்த தன்னோடு வாழ்ந்த பாரதியாரை  நமக்கு தன்னுடைய எழுத்தின் மூலம் காட்டி இருக்கிறார்.  பாரதியார் பொருளாதாரத்தில் மிகுந்த தாழ்ந்த நிலையில் இருந்தார் என்பது நாம் அறிந்ததே.  இந்த புத்தகத்தில் கூட ஒரு இடத்தில் தமிழைப் போற்ற வேண்டும் வாழ வைக்க வேண்டும் என்றால் அதை உயிராய் போற்றும் தமிழ் கவிதைகள் தமிழ் மண்ணின் மைந்தர்கள் அடையாளம் கண்டு வாழ்த்தி வாழ வைக்க வேண்டும்.  நிச்சயமாக அந்த காலத்தில் பாரதியாருக்கு அப்படி யாரேனும் ஒருவர் உத்வேகம் கொடுத்திருந்தால் இன்னும் பல கவிதைகளை நான் பெற்றெடுக்க முடியும் பல நாள் பாரதியாரே நாம் உயிரோடு வைத்திருந்திருக்க முடியும். தன் குடும்பத்தை காக்க பாரதியார் மிகுந்த சிரமப்பட்டு இருக்கிறார்.  

இந்தப் புத்தகத்தின் வாயிலாக நாம் பெற வேண்டிய அறிவு என்னவெனில் இக்காலத்தில் வாழ நல்ல எழுத்தாளர்களை வறுமையில் வாடும் எழுத்தாளர்களை நாம் அடையாளம் கண்டு அவர்களுக்கு உத்வேகம் அளித்தது மேலும் எழுத வைத்து தமிழை காக்க வேண்டும் என்ற சபதம் எடுக்க வேண்டும். 

பாரதியாரைப் பற்றி சிறிதேனும் தெரிந்து கொள்வதற்கான ஒரு நல்ல புத்தகம் இந்த "பாரதி நினைவுகள்" . இந்த புத்தகத்தை படித்து முடித்த பிறகு பாரதியாரின் அத்தனை படைப்புகளையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது, அது வாசிப்பில் வேறு கோணத்தை எனக்கு வழங்குவதாக அமையுமென்று நான் நம்புகிறேன். பாரதியின் படைப்புகளை படியுங்கள் பாரதியாரை கொண்டாடுங்கள்!!! 

நூல்: பாரதி நினைவுகள் 
ஆசிரியர் : யதுகிரி அம்மாள் 
பதிப்பகம்:  கோதை 
விலை : ரூ. 120/-

அன்புள்ள, 
ஸ்ரீமலையப்பன் பாலச்சந்திரன்.

சனி, 2 நவம்பர், 2019

இவான் - நூல் விமர்சனம்


வீதி வாசிக்கிறது குழுவின் மூலமாக பரிசு பெற்ற முதல் புத்தகம் இது. வீதி வாசிக்கிறது குழுவிற்கு மிக்க நன்றி. 

இந்த கதையானது ரஷ்யாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையே நடந்த போரின்  போது ஒரு சிறுவனது குடும்பம் அனுபவித்த இன்னல்களையும் அதன் மூலம் அந்த சிறுவன் தன்னுடைய நாட்டிற்காக தன்னை எவ்வாறு தகவமைத்துக் கொண்டான் என்பதைப் பற்றிய குறுநாவல். 

போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில் தன்னுடைய குடும்பத்தை போரினில் இழந்த 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் அந்த இழப்பினால் மிகுந்த வேதனையுடன் தன் குடும்பத்தை கொன்றவர்களை பழிவாங்குவதற்காக தானே ஒரு கொரில்லா போர் வீரனாக மாறி எதிரி நாட்டுக்கு செல்வதற்காக தன்னை எந்த வகையில் எல்லாம்  தயார்படுத்திக் கொண்டான் என்பது  கதை.

 நிச்சயமாக இது ஒரு உண்மை கதை. இதில் நீங்கள் மிகுந்த கவனம் கொள்ள வேண்டியது என்னவெனில்  12 வயது சிறுவன் இந்த அளவிற்கு தன்னை தயார் படுத்திக் கொள்ள முடியும் எனில் அவன் தன்னுடைய குடும்பத்தின் மீது எவ்வளவு பாசம் கொண்டவனாக இருப்பான் என்பதும் என்பதும் அதேசமயம் மனதிற்குள் எவ்வளவு வேகம் உடையவனாக இருந்திருக்கிறான் என்பதையும் நாம் நிச்சயம் உணர்ந்து கொள்ள வேண்டும் . 

கதை தொடங்கும்போது அவன் தன்னுடைய நாட்டின் ஒரு எல்லைப்பகுதியில் இருக்கும் ஒரு ஆற்றங்கரையோரம் தன்னுடைய நாட்டு வீரர்களாலேயே பிடிக்கப் படுகிறான். அங்கிருக்கும் உயர் அதிகாரி நான் உன்னை யாரென்று கேட்கும் பொழுது அவரை அதிகாரம் செய்பவனாக பதிலளிக்கிறான்.  ராணுவத்தில் இருக்கும் மிக உயரிய அதிகாரிகளை அவன் தெரிந்தவனாக இருக்கிறான் எத்தனை முறை பள்ளிக்கு அனுப்பி விட்டாலும்  போர் செய்வதிலேயே குறியாக இருக்கிறான். இறுதியாக அவனுக்கு போர் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.  உளவு பார்க்கும் வேலையை அவனுக்கு ஒதுக்குகிறார்கள் எந்த தயக்கமும் இன்றி அதை ஏற்றுக் கொள்கிறான்.  

ஆற்றின் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு இரண்டு உயர் அதிகாரிகள் அவனை அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அவன் எதிரி நாட்டை வேவு பார்ப்பதற்காக அழைத்துச் செல்லப்படுகிறான். அங்கேயே அவனை விட்டு விட்டு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ராணுவத்தின் சகல தைரியம் பொருந்திய ஒருவனாலேயே அந்த இடத்தில் தாக்குப்பிடிப்பது கடினம். ஆனால் இவான் எல்லாவற்றையும் கடந்து என்ன செய்தான் என்பதே கதை. 

இந்த நாவலை  ரஷ்ய மொழியில் விளாதிமிர் பகமோலவ் எழுதி இருக்கிறார். தமிழில் முகம்மது செரீபு மொழிபெயர்த்திருக்கிறார்.

 மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை மிகவும் மோசமான மொழிபெயர்ப்பு என்று தான் சொல்வேன். இந்த மாதிரியான அதுவும் உணர்ச்சிவசமிக்க நாவலை  மொழிபெயர்க்கும் போது கூடுதல் கவனம் தேவை. அதை ஒரு துளி கூட சரியாக செய்யவில்லை என்றுதான் தோன்றுகிறது. கூகுள் மொழிபெயர்ப்பான்கூட இன்னும் நன்றாக மொழிபெயர்த்திருக்கும். அவ்வளவு எழுத்துப்பிழைகள். புத்தகத்துக்கு உள்ளே  எழுத்துப்பிழை என்றால்கூட  பரவாயில்லை புத்தகத்தின் பின்னட்டையில்  அதுவும் முதல் வரியில்  எழுத்துப் பிழை. இதே நாவலை வேறு யாரும் மொழிபெயர்த்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை அப்படி ஏதும் இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே. 

 பேசப்பட வேண்டிய ஒரு குறுநாவல் அனைவரும் படிக்கவேண்டிய நாவல் 
" இவான் ".

நூல் : இவான்
ஆசிரியர் : விளாடிமிர் பகமோலவ்
தமிழில் : முகமது செரீப்
விலை : ரூ. 130/-

விமர்சனம்: ஸ்ரீமலையப்பன்


நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...