செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

முத்தன் பள்ளம்" - "கண்ணீரும் கனவுகளும்"

#புத்தக_விமர்சனம்

"முத்தன் பள்ளம்" -
"கண்ணீரும் கனவுகளும்"

இது ஒரு சீரியசான நாவல் அல்லது ஒரு வரலாற்று நூல் அல்லது வெளிப்படையாக சொல்லப்பட்ட புனையப்படாத ஒரு ஊரின் உண்மைக் கதை அல்லது உண்மை நிலை இப்படி  எப்படி வேண்டுமானாலும் இதற்கு பெயர் வைத்துக்கொள்ளலாம்.

ஒரு தேர்ந்த வரலாற்று அறிஞர் ஒரு அரசை பற்றியோ, ஒரு சமுகத்தை பற்றியோ, ஒரு அரசனைப் பற்றியோ, வாழ்ந்த மக்களை பற்றியோ, இயற்கை சூழல்கள் பற்றியோ, இப்படி எத்தனை பற்றிகளை பற்றி விவரிப்பாரோ அத்தனை பற்றிகளைப் பற்றியும் தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து அலசி ஆராய்ந்து அரங்கேற்றியிருக்கிறார்.

கந்தர்வக்கோட்டை காந்தி சிலை முக்கத்தில் இருந்து போக்கிமான் பூச்சி விளையாட்டின் மூலம் புறப்படும் பயணம் முத்தன் பள்ளத்தை பற்றி மட்டும் சொல்வதற்காக அல்ல முத்தன் பள்ளத்தின் மூலமாக அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் அதன் வரலாறுகளை சிறப்பம்சங்களை குறைகளை சொல்வதாக பகுதி 1 அமைந்திருக்கிறது. பகுதி ஒன்னு முறையே அக்கச்சிபட்டி, மல்லிகை நத்தம், பெரியகோட்டை, ஒட்டப்பாலம், சொக்கம் பேட்டை, வேலாடிப்பட்டி, மஞ்சம்பட்டி, வெள்ளாள விடுதி, கல்லாக்கோட்டை இப்படியே இறுதியாக முத்தன் பள்ளம் நோக்கி போக்கிமான் பூச்சி சொல்ல சொல்ல எழுத்தாளர் செல்வதாக கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இப்படி போக்கிமான் பூச்சி ஒவ்வொரு ஊருக்குள்ளும் எழுத்தாளரை கொண்டு செல்லும்போது அவர் கண்ணில் தென்படும் அத்தனை பதாகைகளும் ஊரை மட்டுமல்ல நாவலில் பெரும்பகுதியை மறைத்துக் கொண்டு விட்டது என்றே எனக்குப் படுகிறது.

போக்கிமான் பூச்சி, பதாகைகளை காட்டாமல் வேறு எதையாவது அடையாளமாக காட்டி இருக்கலாம் என்று தோன்றுகிறது. இருப்பினும் மேற்கோள் காட்டி இருக்கும் அத்தனை பதாகைகளும் தற்கால அரசியலை, அரசியல்வாதிகளை, நடிகர்களை, சுயநலவாதிகளை, சாதிகளை, கட்சிகளை பதம் பார்த்து தான் செல்கிறது. இந்த ஒன்றிற்காக பதாகைகளையும் போக்கிமான் பூச்சியயையும் வரவேற்கலாம்.

அடுத்ததாக பகுதி இரண்டில் போக்கிமான் பூச்சி காலடி எடுத்து வைக்கும் இடத்தில் முத்தன் பள்ளம் இருக்கிறது. அஜித் படத்தில் வரும் அத்திப்பட்டியை விட அங்கு வாழும் மக்களின் நிலை மிக மோசமாக மோசத்திலும் மோசமான ஒன்றாக இருப்பது கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. கவலையளிக்கிறது.

முத்தன் பள்ளம் ஏதோ திடீரென்று விண்வெளியில் இருந்து பறந்து வந்து அவதரித்த ஊர் அல்ல. அதன் வரலாறு மிகப்பெரியது. அதை எழுத்தாளர் மிக கவனமாக கையாண்டு இருக்கிறார். முத்தன் பள்ளம் உருவாக அதன் பின்னால் இருக்கும் பாட்டன் , அவரின் முந்தைய வரலாறு, பாட்டனின் பாட்டன் வரலாறு என்று அத்தனைக்குள்ளும் பயணித்து ஒரு வரலாற்றுப் பெட்டகமாக குறிப்பாக முத்தரையர்கள், பல்லவர்கள், பல்லவராயர்கள், சோழர்கள், நாயக்கர்கள் என அத்தனை அரசர்களும் முத்தன் பள்ளம் உருவாக காரணமாக இருந்திருக்கிறார்கள்.

இதில் முத்திரையர்களின் வீரம் முழுமையாக சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது புதுக்கோட்டை சமஸ்தானத்தை பற்றியும் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் முத்தன் பள்ளம் உருவாக எவ்வாறான உதவிகளை செய்தார் என்றும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் பாட்டனின் உழைப்பு, முத்தாயியின் மீது அவருக்கு இருந்த காதல் மிக லாவகமாக சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையாகவே அந்த ஒரே இரவில் காதல் வந்ததா என்று கொஞ்சம் நம்பத்தான் முடியவில்லை இருந்தாலும் அந்த பத்தாவது பகுதி மிகுந்த சுவாரசியமாக இருந்தது.

இறுதியாக போக்கிமான் பூச்சி முத்தன் பள்ளத்தை நோக்கி விரைந்து இறுதியாக ஊரின் கடைக்கோடியில் இருக்கும் வீட்டுக்குள் நுழைந்து இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு மனிதனின் தொடைக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்டது மிகுந்த வேதனை தான். இறுதிப்பக்கங்கள் என்னை மிகவும் இதயம் நொறுங்க வைத்துவிட்டது.

இறுதியாக சமகாலத்தில் இருக்கும்  ஆட்சியாளர்கள் முத்தன் பள்ளத்தின் மீதும் அங்கு வாழும் மக்களின் மீதும் அவர்கள் படும் துயரத்தின் மீதும் கொஞ்சமேனும் இரக்கப்பட வேண்டும் இல்லையேல் அவர்கள் ஆட்சியிலிருந்து இறக்கப்படவேண்டும்.

ஒற்றை வரியில் இந்த முத்தன் பள்ளம் நாவலைப் பற்றி சொன்னால் போக்கிமான் பூச்சியின் மூலம் அண்டனூர் சுரா என்ற Common மேன் கண்டுபிடித்த பழங்கால வரலாற்று சொர்க்கபூமி.

#இந்த_ஆண்டில்_இதுவரை_5
#புத்தக_விமர்சனம்

3 கருத்துகள்:

  1. நல்லதொரு அறிமுகம்.

    இதுபோன்ற பதிவுகளின் கீழ் புத்தகத்தின் பெயர், எழுதியவர் பெயர், பதிப்பகம், விலை, முடிந்தால் பக்கங்கள் எண்ணிக்கை ஆகியவற்றைக் கொடுத்தல் நலம். எழுதியவருக்கும் பெருமை. படிப்பவர்களும் அறியலாம்.

    பதிலளிநீக்கு
  2. நிச்சயமாக சார் இதிலேயே இணைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. போக்கிமான் பூச்சி என்று நமக்கு தெரியாத பூச்சி இனம் உள்ளதோ என்று கூகிளில் போய் தேடிப்பார்த்தால் ... அட சே... >> கிளிக் சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    பதிலளிநீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...