செவ்வாய், 25 ஏப்ரல், 2017

சுட்டி

நடைபாதையின் 
விளிம்பில் 
நிழலொன்று 
தள்ளாடிக்கொண்டிருக்கிறது 
உட்கார்ந்து 
எழுந்து 
திரும்பி 
சப்புகொட்டியது 
பொக்கை வாயால் 
குச்சிமிட்டாயை 
மறுபடியும் 
தவழ்ந்து 
எழுந்து 
தள்ளாடிக்கொண்டிருக்கிறது


                                                                                           நட்புடன் ஸ்ரீ 

திங்கள், 24 ஏப்ரல், 2017

பொக்கிஷம்

     குழந்தைகளை புரிந்துகொள்வதென்பது ஒரு கலை.  அவர்களோடு இணைந்து பயணித்தால் மட்டுமே அதில் வெற்றிபெற முடியும். இங்கு குழந்தை தானாய் வெற்றி பெறவேண்டும் என்பதைவிட நாம் முன்கூட்டியே  வெற்றிக்கான இலக்கை அவர்களுக்கு குறிப்பால் உணர்த்திக்கொண்டே இருக்கிறோம் என்பதை எத்தனை பெற்றோர்கள் உணர்திருக்கிறார்கள் என்பது வினாக்குறியே ? அப்படியே உணர்ந்தார்கள் என்றாலும் அதிலிருந்து எத்தனை பெற்றோர்கள் மீண்டு வருகிறார்கள் என்பதிலும் ஒரு நூறு வினாக்குறியை இட்டுக்கொள்ளுங்கள் ??? 


    உதாரணமாக என்னிடம் பயிலும்  ஆறாம் வகுப்பு மாணவனின் அம்மா என்னை சந்திக்க வந்தார்கள் . என்ன என்று வினவுவதற்கு முன்னமே சார் என் பையன் வீட்டுக்கு வந்ததுமே பைய தூக்கி போட்டுட்டு விளையாட போய்விடுகிறான் சார் என்றார்கள். இப்படியே விளையாடினால் அவன் எப்படி சார் முன்னுக்கு வர முடியும். எனக்கு அவனை பற்றிய நிறைய கனவுகள் இருக்கிறது சார் . அவன் நன்றாக படித்தால் என்ன வேண்டுமானாலும் படிக்க வைப்போம் சார் என்றார்கள்... நானோ அம்மா பையன் விளையாடுவது உடல் நலத்திற்கும் அவன் மனத்தால் தன்னை அடுத்து ஒருமுகப்படுத்துவதர்க்கும் விளையாட்டு தேவைதான் என்றேன். இல்லை சார் அவன் ஐந்து மணிக்கு போனால் எட்டு மணிக்குதான் வருகிறான் என்றார்கள். சரி உடனே புரிய வைக்க முடியாது என்பதை புரிந்து கொண்டேன்  மாணவனிடம் விசாரித்ததில் அவன் அப்படிதான் இருக்கிறான் என்பதை தெரிந்து உறுதிபடுத்தி அவனுக்கு அறிவுரை கூறி இனி நீ எத்தனை மணியிலிருந்து எத்தனை மணிவரை படிக்கிறாய் என்பதை டைரியில் எழுதி தினசரி  அம்மாவிடம் கையொப்பம் பெற்றுவா என்று சொல்லி அனுப்பி வைத்தேன்... 

இதில் பிரச்சனையை ஒரு பக்கம் தீர்த்து வைத்தேன் என்பதைவிட அவனுடைய கனவுகள் என்னவாய் இருக்குமோ ? அவன் கனவுகள் பொய்த்துபோய்விடுமோ என்ற பயமே அதிகரித்தது ?

குழந்தைக்கு நல்லது செய்கிறேன் பெயரில் கனவுகள் மறகடிக்கப்பட்டும், சில நேரங்களில் தியாக பொருளாகவும் மாறிபோகிறது. மாறாக பல்வேறு துறைகளை பற்றி அவனுக்கு சொல்லியும் குடும்பத்தின் பொருளாதாரத்தை சொல்லியும் அவன் வளர்க்கப்படும்போது குழந்தை தானாகவே தன் மனதிற்குள் கணக்கிட்டு தன்னுடைய துறையை தேர்ந்தெடுப்பார்கள் என்பது என் எண்ணம் . 

பெற்றோர்களே 

புரிந்துகொள்ளுங்கள் . அவர்கள் உங்கள் கனவுதான் என்றாலும் அவர்களுக்கென்றும்  கனவுகள் இருக்கிறது.
           
அவர்கள் உங்களுக்காக நீங்களே படைத்துக்கொண்ட பரிசு. அவர்களுடைய கனவுகளை நிறைவேற்றி அதை பரிசளியுங்கள்.

அவர்களுக்காக நீங்கள் பெரிதாய் வேறென்ன செய்ய வேண்டும் 


                                                                                                       நட்புடன் ஸ்ரீ 
                                                                                   

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

எறவானம் - மேஜிக்

இதோ வெகுநாள் கழித்து வலையுலக நட்புக்களை சந்திப்பதில் மகிழ்வு .

இனி முடிந்தவரை தினமும் ஒரு பதிவையேனும் உங்களிடம் பகிர்ந்து உங்களோடு சேர்ந்து பயணிக்க முயல்கிறேன் .

இன்று புத்தக தினம் என்பதால் உங்களிடம் ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்ய விழைகிறேன்.

இன்று வீதி கலை  இலக்கிய அமைப்பில் எறவானம் என்ற கவிதை நூலை படித்து விமர்சனம் செய்யும் வாய்ப்பு கிட்டியது.

கவிதை நூலை பற்றி சொல்லவேண்டுமெனில் , நிச்சயம் இந்த நூலை படித்து கீழே வைக்கும்போது நீங்கள் ஒரு பெரிய மாறுதலுக்கு உட்படுத்தப்படுவீர்கள்  என்பது என்  எண்ணம்.

புத்தகம் சமூகத்தையும்,நிகழ்கால அரசியலையும் , சாதிய  வர்க்கத்தையும் வறுத்து எடுத்து(வை)ரைக்கிறது. இந்நூலை கவிஞர் வினையன்  அவர்கள் எழுதியிருக்கிறார் .

சொற்களில் புகுந்து விளையாண்டிருக்கிறார் கவிஞர். மனதில் ஒரு சொல் எப்படி எழுமோ அதை அப்படியே வார்த்து கவிதையாய் கொட்டியிருக்கிறார். முடிந்தால் படித்துப்பாருங்கள்.

ஒரே ஒரு கவிதையின் சாரத்தை மட்டும் குறிப்பிடுகிறேன்


வயோதிகன்  ஒருவன் இறந்துவிட்டான். சுடுகாட்டில் அவன் பிள்ளை சொந்த பந்தங்கள் எல்லாம்  கொள்ளிவைத்துவிட்டு போய்விடுகிறார்கள் . இப்பொழுது சுடுகாட்டில் வெட்டியானும் எறியும் பிணமும் மட்டும்தான். வெட்டியான் அவரிடம் என்னை சாதி சொல்லி  கேலிசெய்தாயே என்று மணிக்கட்டில் ஒரு அடி , இதனை பேருக்கு வெட்டியான் நீ உனக்கு யாருடா கொள்ளிவைப்பானு கேட்டியேன்னு முழக்காலு மூட்டுல ரெண்டு அடி பாத்தியாடா செத்தா நீயும் நானும் சாம்பல் தாண்டானு  சொல்கிறபடி ஒரு கவிதை .... ஆனால் கவிதையாய் படிக்கும்போது செவிட்டில் அறைந்தாற்போல் இருந்தது .
 எறவானம் - மேஜிக் 

நண்பர்களுக்கு இனிய புத்தக தின வாழ்த்துக்கள் .


                                                                                                            --- ஸ்ரீ 

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...