இன்றைய பதிவில் நான் எடுத்துக்கொண்ட பகுதி ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் சம்மந்தமானது. இதைப் படிக்கும் நீங்கள் உங்களுக்கு தெரிந்த ஆசிரிய பெருமக்களிடம் இது பற்றி கலந்துறையாடியும் , நீங்கள் ஆசிரியர்களாகவோ அல்ல இந்த பகுதியை பற்றிய ஆராய்ச்சியாளராகவோ இருந்தால் மேற்கொண்டு அறிவுரையும் ஆலோசனைகளையும் பதிவிடவும் ...
ஆசிரியர் எவ்வாறு உதவ வேண்டும் ?
ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பல வழிகளில் உதவ முடியும். நம்மிடம் பயிலும் மாணவர்களின் பாடம் தொடர்பான அவர்களது பலத்தையும் , பலவீனத்தையும் , தேவைகளையும் காண்பதன் மூலம் அவர்கள் உண்மையாகவே பாதிக்கப்பட்டார்களா என்பதை கண்டறிதல் வேண்டும்.
இதோ உதாரணத்திற்கு என்னுடைய வகுப்பில் ஒரு மாணவனை கண்டறிந்த சான்றுப் படம் ...
(சான்று)
பொதுவாக நம்முடைய கண்ணோட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் டிஸ்லெக்ஸ்சியா குறைபாடுடையவர்களாக தோன்றுவார்கள். அப்படி நீங்கள் நினைத்தால் அது தவறு ! மெதுவாகக் கற்கும் மாணவர்களையும் நாம் குறைபாடுடையவர்களாக கருதிவிடுவதே அதற்கு காரணம்.
உண்மையாகவே குறைபாடுடைய மாணவர்களை எவ்வாறு கண்டறிவது ?
அவர்களது தேவைகளை அறிந்து அதற்குத் தகுந்த பாடத்திட்டங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். சாதாரண மாணவர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சியிலிருந்து வேறுபட்டு புதிதான அவர்களுக்கென்று பாட திட்டத்தை உருவாக்க வேண்டும்.
அவர்களுக்கு மனனப் பயிற்சியளித்து பின்னர் பொருள்களுக்கான காரணங்களையும் கருத்துருக்களையும் விளக்க வேண்டும். அவர்களது இயக்க குறைபாடுகள் , சிந்திக்கும் திறன் இதன்மூலமே வளர்ச்சியடையும்.
(உங்களுடைய மைன்ட் வாய்ஸ்களை கேட்க முடிகிறது... நீ எழுதுவது எங்களுக்கும் தெரியும் அதற்கான நேரம்தான் எங்களிடம் இல்லை என்றுதானே கேட்க வருகிறீர்கள் ?)
ஒரு நிமிடம் சிந்தியுங்கள் உங்கள் குழந்தைகள் இத்தகைய பாதிப்பில் இருந்தால் என்ன செய்வீர்கள் ? உண்மையாகவே டிச்லெக்ஸ்சியா குறைபாடுடைய குழந்தைக்குத் தேவை அவர்களை அடிக்கடி உற்சாகமூட்டுவதும் , அவர்களுடன் விளையாடுவதும் , கதைசொல்வதும், அவர்கள்மீது நீங்கள் அக்கறையுடையவர்கள் என்று அவர்களை உணரவைப்பதுமே இந்த சவாலில் நீங்கள் வெற்றிபெறும் வழியாகும். எத்தகைய வழிகளில் அவர்கள் குறைபாடுடையவர்கள் என்று நீங்கள் புரிந்துகொண்டால் அவர்களை சரி செய்வது மிகவும் எளிது.
ஆசிரியர்கள் எப்படியெல்லாம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் ?
௧. அவர்களுடைய உணர்வுகளை கவனித்து அவர்களுக்கு ஊக்கம் அளித்தல் வேண்டும். உதாரணமாக அவர்களுடைய கோபம் , அழுகை , வெறுப்புணர்ச்சிகளை கண்டறிதல். இத்தகைய குறைபாடுடைய மாணவர்களிடம் மொழியறிவு குறைவாக இருப்பதால் தனக்கு என்ன பிரச்சனை என்பதைக்கூட சொல்ல முடியாமல் தவிப்பார்கள். அவர்களை கண்டறிந்து சரி செய்தல் வேண்டும்.
௨. அவர்கள் மதிப்பெண்களைவிட மதிப்பினையே உயர்வாக கருதுவதாக கூறுகிறது ஆய்வு. நீங்கள் அவர்களுக்கு வழங்கும் குறைவான மதிப்பெண்களைவிட அவர்களை "முட்டாள்கள் ", "திருந்தாதவர்கள் ", "சோம்பேறிகள் ", உன்னால் எதுவும் செய்ய முடியாது ", " நீ எதற்கும் லாயக்கு இல்லை " என்ற வார்த்தைகள் அவர்களை ரணப்படுத்துவதோடு அவர்களை தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களாக மாற்றி தோல்வியாளர்களாக்கிவிடுகிறது.
௩. இந்த மூன்றாவது செய்திதான் முக்கியமாக ஆசிரியர்கள் மனதில் உள்வாங்கவேண்டிய செய்தி. டிஸ்லெக்ஸ்சியா குறைபாடுடைய மாணவன் தனக்கென்று ஒரு வெற்றிபெறக்கூடிய இலக்கை நிர்ணயம் செய்ய மாட்டான். ஆசிரியர்தான் அவர்களுக்கான துரிதமாக வெற்றிபெறக்கூடிய இலக்கை நிர்ணயம் செய்துகொடுத்தல் வேண்டும்...
என்ன நண்பர்களே இன்றைய செய்தி பயனுள்ளதாக இருக்குமென்று நினைக்கிறேன் !!! அடுத்த பதிவில் மாணவர்களுக்கு என்ன பயிற்சிகள் அளிப்பதன் மூலம் அவர்களை வெற்றியாளர்களாக மாற்றலாம் என்பதை தருகிறேன் !!!!
நன்றியுடன் ஸ்ரீ