புதன், 25 மே, 2016

மேக்கிங் ஆப் விதைக்கலாம் - பகுதி 3

ஒத்த கருத்து என்பது இத்தனை நண்பர்களிடம் இவ்வளவு சீக்கிரம் உருவாகும் என்பதை நான் உண்மையில் நம்பவே இல்லை . இன்று நினைத்தாலும் நான் வியந்துதான் போகிறேன் . விதைக்கலாம் உருவான நேரமும் இதற்கு முக்கிய காரணம் என கருதுகிறேன் . 


கலாம் அய்யாவின் மறைவும் அதைத்தொடர்ந்து எங்கள் ஒவ்வொருவர்  மனதில் ஏற்பட்ட உந்துதலும் எங்களை உடனுக்குடன் செயல்பட வைத்தது .. ஊரெங்கும் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்கள் கண்களை உருத்தியதைவிட அய்யா கூறிய கொள்கைகள் எங்களை உறுத்திக்கொண்டே இருந்தது .  


நான் எதிர்பார்க்காத நிகழ்வுகள் பல இரண்டாம் விதைக்கலாம் கூட்டத்தில் நடைபெற்றது என போன பதிவில் கூறியிருந்தேன் அப்படி என்னதான் நடந்தது ...விதைக்கலாமின் கொள்கையை நீங்கள் அதற்கு முன்னர் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் 

"ஒவ்வொரு ஞாயிறும் மரக்கன்றுகளை அவற்றை பாதுகாப்பாக வளர்க்க உறுதி தரும் வளாகங்களில் பாதுகாப்பு கூண்டோடு  கன்றுகளை நடுவதும்  தொடர்ந்து கன்றுகளை கண்காணித்து  பராமரிக்கவும்  தீர்மானிக்கப்பட்டது ". 

("கஸ்தூரிரங்கன் அய்யா அவர்களால் முதன்முதலில்
எழுதப்பட்டது இது ")


நாங்கள் முதல் கூட்டத்தில் பங்குபெற்றோரிடம் மேலும் சில நண்பர்களை கூட்டிவாருங்கள் என கூறியிருந்தோம் . எனவே இரண்டாம் கூட்டத்தில்  அதிக நண்பர்களை எதிர்பார்த்தோம் . எனவே அனைவரும் உட்கார்ந்து பேச ஒரு நல்ல இடம் வேண்டுமே என கஸ்தூரிரங்கன் அய்யாவிடம் கேட்டபொழுது கவலை படவேண்டாம் ஸ்ரீனி ஒரு இடம் இருக்கிறது அங்கு செல்லலாம் வா என கூடிசென்றார் . 

அந்த இடம் எந்த ஒரு சமுதாய நிகழ்விற்கும் மறுப்பு சொல்லாத இடம், இல்லை என்ற சொல்லை இதுவரை அவர் குரலில் நான் கேட்டதே இல்லை , புகழ்ச்சி விரும்பாத மனிதர், வீதியின் ஒவ்வொரு நிகழ்விற்கும் சொந்தக்காரர், ஆக்ஸ்போர்ட் சமையல் கலை கல்லூரியில் நிகழ்விற்கான இடம் தந்தார் . இன்று வரை விதைக்கலாமை பற்றிய ஒவ்வொரு நிகழ்வையும் அமைதியாக கண்காணித்து தேவைப்படும் நேரங்களில் ஆலோசனைகளை தந்து வருகிறார் சுரேஷ் சார் .. இதன் மூலம் உங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் சார் .


( ஆக்ஸ்போர்ட் சுரேஷ் சார் )


அடுத்ததாக நான் எதிர்பார்க்காதது இன்னொருவரின் வருகை . ஜே. சி. ஐ -யில் எனக்கு நண்பர் கனகமணி மூலம்  அறிமுகமானவர், அமைப்பிற்கு வருவதற்கு முன்னர் சிறு சிறு சந்திப்புகளிலும் , அலைபேசி உரையாடல்களிலும் மட்டுமே எங்கள் நட்பு தொடர்ந்து வந்தது , அவர் அமைப்பிற்குள் வந்ததை இன்று நினைத்தாலும் பிரமித்துப்போகிறேன் . 

விதைக்கலாம் பற்றிய குறிப்புகள் எழுத நோட் வாங்க கடைக்கு சென்றபோது அவரை எதிர்பராதவிதமாக சந்தித்தேன் , அமைப்பை பற்றி கூறியபோது முன்னே செல்லுங்கள் பின்னாடியே வருகிறேன் என்றார் , இதைபோன்ற பதில்களை பெரும்பாலும் உதாசினப்படுத்திவிடுவேன். ஆனால்  நான் போவதற்கு முன்னாள் அங்கே இருந்தார், அவரிடம் கருத்து கேட்டவுடன் அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, அமைப்பிற்குள் வந்த எவரும் கேட்காத கேள்வி அது, 

"எவ்வளவுநாள் இந்த அமைப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறீர்கள் . குறைந்த காலம்தான் என்றால் நிகழ்விற்கு நான் வரவில்லை"
என்றார் . எனக்கா கோபம் அத்துமீறி வந்தது . என்னடா இது எவ்வளவு முயற்சிசெய்து இதை துவக்க இருக்கிறோம் இவர் என்னடா என்றால் வந்ததும் இந்த மாதிரி கேட்கிறாரே என்று நினைத்துக்கொண்டு அமைதியாக இருந்தேன் . அது என் மனதில் பொறி தட்டிவிட்டதுபோல பீரிட்டு கிளம்பியது. அங்கிருந்த அனைவரையும் ஒன்றுபட வைத்த கேள்வி அது என்பதை ஒவ்வொரு நிகழ்வின்போதும் இன்றளவும்  நினைத்துக்கொள்வேன் . என் வாழ்வை எனக்கு பிடித்தமாதிரி செய்துவிட்ட , யூ.கே . இன்போடெக் உரிமையாளர் நண்பர் யூ.கே . கார்த்திகேயன் அவர்கள்,


( நண்பர் யூ.கே. கார்த்திகேயன் )


விதைககலாமின் துண்களில் ஒருவர் ( இவரை பற்றி தனிபதிவே எழுதலாம் அவ்வளவு இருக்கிறது . இப்பொழுது எழுதினால் அவரிடமிருந்து சில மிரட்டல்களை சந்திக்க நேரிடும் ... இன்னொரு சந்தர்பத்தில் அது நிச்சயம் வெளிவரும் ) மேலும் அவரைப்பற்றி அறிய www.ukinfotech.in

அன்று எடுத்த முக்கிய முடிவுகளில் இன்னொன்றும் மிகமிக முக்கியமானது , ஒரு அமைப்பின் வெளிப்படை தன்மைக்கும் எந்த சூழ்நிலையில் இந்த அமைப்பு உருவாகிறது, யாருக்காக உருவாகிறது என்று சிந்திக்கும்  நோக்கில்  யோசித்தால் அன்று அவர் எடுத்த முடிவு அவசியமான ஒன்றாகும் என்பது இன்றளவும் என்னுடைய கருத்து.

அவரை பற்றி அடுத்த பதிவில் கூறுவதே சிறப்பானதாக இருக்கும் என கருதுகிறேன். எனவே கருத்தை மட்டும் பதிவு செய்கிறேன். நிகழ்வு எந்த இடத்தில நடந்தாலும் நிகழ்விற்கான போக்குவரத்து செலவை உறுப்பினர் ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த பணத்திலிருத்துதான்  செலவு செய்துகொள்ள வேண்டும் இல்லையேல் நம்பிக்கைதன்மை போய்விடும் என்று கூறினார்.

அவர்சொல்படி இன்றளவும் விதைக்கலாமின் நிதியிலிருந்து ஒரு பைசாகூட நாங்கள் போக்குவரத்திற்காகவோ அல்லது வேறு எதற்காகவும் நாங்கள் செலவு செய்தது கிடையாது என்று கூறுவதில் பெருமை கொள்கிறோம்.

இன்னும் விதைக்கலாமின் ஒவ்வொருவரை பற்றியும் வரும் பதிவுகளில் எழுத போகிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் இல்லையேல் விதைக்கலாம் இல்லை. ஒவ்வொருவரும் ஆச்சர்யங்களே. இந்தபதிவில் இன்னும் கூடுதலாக ஒருவரை பற்றி மட்டும் !!!


அடுத்த முக்கிய நிகழ்வு விதைக்கலாமின் தொடக்கம் . என்னுடைய சிந்தனையில் இதை தொடங்கும் போது வாராவாரம் நிகழ்வு நடக்க வேண்டும் என்பதால் ஐம்பது நிகழ்விற்கான இடங்களுக்கு உறுதி வந்தபிறகே நாம் நிகழ்விற்குள் செல்லவேண்டும் என்று திட்டமிட்டு அதை உறுப்பினர்களிடம் கூறியிருந்தேன் . ஒருவர் மட்டும் மாற்றி யோசித்தார் , ஏன் அவ்வளவு காலம் தாமதபடுத்த வேண்டும் , இந்த வாரமே தொடங்குங்கள் ? நிச்சயம் இடங்கள் வந்து சேர்ந்துவிடும் என்றார்.

விதைக்கலாமில் சில தீவிரவாதிகள் உண்டு, அவர்களில் இவரும் ஒருவர் , இரண்டிற்கு இரண்டு குழிகள் எடுத்தால் மட்டுமே நிகழ்விற்கு வருவேன்? என்று அதிர்ச்சியளித்தார்  எடுத்தோம் , எடுத்துவருகிறோம்.

நிகழ்விற்கு இரண்டுநாள் முன்னமே குழிகள் எடுத்தால் மட்டுமே வருவேன்?  என்றார் , அதையும் கூடியமட்டும் செய்துவருகிறோம் , இப்படி அடிக்கடி பல அதிர்ச்சி வைத்தியங்கள் கொடுத்தே நம்மை செயல்பட வைப்பார் , மூத்த சகோதரர் , ஏ. மாத்தூர் பள்ளி ஆங்கில ஆசிரியர் நண்பர் ராமலிங்கம் அவர்கள்.


( நண்பர் லெ. ராமலிங்கம் )



இவர் எடுத்த முடிவே இன்று விதைக்கலாம் நாற்பதாவது நிகழ்வில் இவ்வளவு சீக்கிரம் அடியெடுத்து வைக்க காரணம் . அனைவரும் உடனடியாக உடன்பட்டோம். இங்கே இன்னொரு குறிப்பு அங்கே நடந்த இவ்வளவு விவாதத்தில் விதைக்கலாம் என்ற பெயர் அப்பொழுது வைக்கப்படவே இல்லை . இதை மனதில் நிறுத்தி நண்பர்கள் இந்த கட்டுரையை வாசிக்கவும்.


அதற்கான முன்னெடுப்புகளை பற்றி உடனே பேசினோம். அதை ஒவ்வொன்றாக உங்களுக்கு தருகிறேன் . (தமிழ் எங்கள் வரிசையில் )

௧. அமைபிற்கு பெயர் வைப்பது.

௨ . தற்காலிக கட்செவி குழு ஒன்றும், முகநூல் பக்கம் ஒன்றும் துவக்கி  நண்பர்களை இணைப்பது .

௩. அமைபிற்கு ஒரு வலைப்பூ துவங்கி அதில் செயல்படுவது .( http://vithaikkalam.blogspot.in/)

௪. அமைபிற்க்காக ஒரு இ-மெயில் உருவாக்குவது அதன் மூலம் நண்பர்களுக்கு தெரியபடுத்துவது .

௫. கன்றுகளை எங்கு வாங்குவது, எந்த வகையான கன்றுகளை வாங்குவது என்று முடிவு செய்துகொள்வது.

௬. கன்றுகளை பாதுகாக்கும் கூண்டுகளை வாங்குவத்துபற்றி முடிவு செய்துகொள்வது .

௭. மரங்களை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு சீக்கிரம் வளரும் மரம் எது ? எது நன்மை பயக்கும் மரங்கள் என்று கண்டறிவது .

௮ . நிகழ்விற்கான இடங்களை சேகரிப்பது .

இப்படி இன்னும் பல....

அடுத்த பதிவில் விதைக்கலாம் என்ற பெயர் எப்படி வந்தது ? யாரால் வந்தது? அவருக்கும் இதற்கும் உள்ள தொடர்பு ? முதல் நிகழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் ? முதல் விதைக்கலாமின் ஒரு அலாதியான பயணம் மற்றும் இன்னும் பல சம்பவங்களோடு !!!


வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம் நண்பர்களே விதைக்கலாமோடு........

18 கருத்துகள்:

  1. விதைக்கலாம் விதைக்கலாம் மூளைக்கட்டும் வளரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா

      நீக்கு
  2. விதைக்கலாம் என்ற அமைப்பின் மூலம் மரங்களை மட்டுமல்ல நல்ல எண்ணங்களையும் நம்பிக்கையும் சேர்த்தே விதைக்கலாம் என்பதை உங்கள் முயற்சிகள் உறுதிபடுத்துகின்றன. பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  3. நல்ல முயற்சி. எங்கள் பாஸிட்டிவ் பகுதியிலும் ஒருமுறை பகிர்ந்துள்ளோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் பார்த்தேன் சார் . மிக்க நன்றி நீங்கள் எங்களை மூன்றாவது நிகழ்விலேயே அன்கீகரித்துவிட்டீர்கள்..

      நீக்கு
  4. வாழ்த்துக்கள் நண்பரே
    விதைக்கலாம் ஆல் போல் தழைக்கட்டும்

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் விழாவுக்காகப் புதுக்கோட்டை வந்திருந்தபோது, விதைக்kalam பற்றிக் கேள்விப்பட்டேன். உங்கள் பதிவைப் படித்தபின் முனைப்பான ஒரு அணி இதில் திறம்பட இயங்க ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது.

    எனக்கு ஒரு கவலை. இந்தியா முழுதும் தலைவர்களும், பிரமுகர்களும், இயக்கங்களும் மரக்கன்றுகளை நடுகிறார்கள், நடுகிறார்கள், நட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு ஆறு மாதம், ஒரு வருட இடைவெளிக்குப்பின் அவற்றின் நிலை என்ன? அவை நன்றாக பாதுகாக்கப்பட்டனவா? வளர்க்கப்பட்டனவா? இப்போது வளர்ந்து செழித்திருக்கின்றனவா? இதுபற்றிய follow-up பற்றி நான் எதுவும் எங்கும் கேட்டதில்லை.

    உங்கள் இயக்கத்தில் இதற்கான ஏற்பாடுகள் சரிவர செய்யப்பட்டிருக்கும் என நம்புகிறேன். நல்நோக்கம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மனதை குளிர்வடையச்செய்யும் பதில் என்னிடம் உள்ளது வைத்த ௪௩௧ (431) செழிப்பாக வளர்ந்துகொண்டிருக்கிறது ... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ... தொடர்வோம்

      நீக்கு
  6. தழைக்கட்டும்...வாழ்க!வளர்க!!

    பதிலளிநீக்கு
  7. செழித்து வளர்கிறது என்கிற செய்தி சந்தோஷம் தருகிறது. மரம் செழித்தால் மனிதனும் செழிப்பான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தங்கள் தொடர் ஊக்குவிப்புக்கு ...தொடர்வோம்

      நீக்கு
  8. ஆஹா மனம் நிறைந்த வாழ்த்துகள் பா...நடை நல்லாருக்கு...தொடர்ச்சியா படிக்கத்தூண்டும்படி..விதைக்கலாமுடன் பயணிக்கின்றேன்..பா..

    பதிலளிநீக்கு
  9. ஆஹா மனம் நிறைந்த வாழ்த்துகள் பா...நடை நல்லாருக்கு...தொடர்ச்சியா படிக்கத்தூண்டும்படி..விதைக்கலாமுடன் பயணிக்கின்றேன்..பா..

    பதிலளிநீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...